தலைப்புச் செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ருஷ்டி, நிபந்தனையுடன் பிணையில் விடுவிப்பு

ஸ்ரேலுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு – தடுத்து வைக்கப்பட்டிருந்த முகம்மட் லியாவுதீன் முகம்மட் ருஷ்டி எனும் இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று (07) குறித்த இளைஞரை அத்தனகல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தமையினை அடுத்து, அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இதேவேளை, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகி கையொப்பம் இட வேண்டும் எனவும் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளதாக தெரியவருகிறது.

நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மேற்படி இளைஞர், கொழும்பிலுள்ள நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டினார் எனும் குற்றச்சாட்டில் கடந்த மாதம் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர், மார்ச் 25ஆம் திகதி தொடக்கம் 90 நாட்கள் அவரைத் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சர் எனும் வகையில் – குறித்த இளைஞரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கையொப்பமிட்டார் எனத் தெரிவிக்கும் ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இளைஞர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டமையைக் கண்டித்து, பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

தொடர்பான செய்தி: ஜே.வி.பி செய்தால் சரி; ருஷ்டி செய்தால் பிழையா?: நியாயம் கேட்கிறார் ‘தமிழன்’ ஆசிரியர் சிவராஜா