தலைப்புச் செய்திகள்

ஜே.வி.பி செய்தால் சரி; ருஷ்டி செய்தால் பிழையா?: நியாயம் கேட்கிறார் ‘தமிழன்’ ஆசிரியர் சிவராஜா

லஸ்தீனத்தில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேலுக்கு, தனது கண்டனத்தை வெளியிடும் வகையிலான வாசகங்களைக் கொண்ட ‘ஸ்டிக்கர்’ ஒன்றை ஒட்டியமைக்காக, ருஷ்டி எனும் இலங்கை இளைஞர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இளைஞர் செய்தமை சரிதான் என, தமிழன் பத்திரிகையின் ஆசிரியர் ஆர். சிவராஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கொம்பனித் தெருவில் உள்ள வியாபார நிறுவனமொன்றில் பணியாற்றும் நிட்டம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய – முஹம்மட் றுஷ்டி என்பவர், காஸாவில் போர்க்குற்றம் புரியும் இஸ்ரேலை கண்டிக்கும் வகையிலான ‘ஸ்டிக்கர்’ ஒன்றை தனது வியாபார நிலையத்தில் ஒட்டியிருந்தார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி நடந்தது.

இந்த விடயம் கொம்பனித்தெரு பொலிஸாருக்குத் தெரிய வந்த நிலையில், அவர்கள் குறித்த இளைஞரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை விசாரித்த அதிகாரிகள், மூன்று மாதங்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவ்வாறு மூன்று மாதங்கள் நபரொருவரைத் தடுப்புக் காவலில் வைப்பதென்றால், பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியைப் பெறுதல் வேண்டும். நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ருஷ்டி எனும் அந்த இளைஞரை குறித்த ‘ஸ்டிக்கர்’ ஒட்டமைக்காக பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்துள்ளமை நியாயமற்றது என – பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த கைது மற்றும் தடுப்புக் காவலைக் கண்டித்து நேற்று (29) பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெற்றது.

இந்தப் பின்னணியில் ‘ருஷ்டி, நீ செய்தது சரியே’ எனும் தலைப்பில், ‘தமிழன்’ பத்திரிகையின் ஆசிரியர் சிவராஜா, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவொன்றை இட்டுட்டார்.

அந்தப் பதவில்; ‘இஸ்ரேலுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டினார் என்று கூறி , முஸ்லிம் இளைஞர் ருஷ்தி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்களை துன்பப்படுத்தும் கொடுங்கோல் சட்டம் என்று இன்றைய ஆட்சியாளர்களால் கடந்த காலங்களில் வர்ணிக்கப்பட்ட – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதுவும் இஸ்லாமிய மக்களின் புனித ரமலான் மாத காலத்தில், எந்த தயவு தாட்சண்யமும் இன்றி இது நடந்திருக்கிறது. ரமலான் பண்டிகை நாளில் கூட அந்த இளைஞர் கூண்டுக்குள்ளே அடைந்திருக்க வேண்டும்.

இஸ்ரேலுக்கு எதிரான ஒரு போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு இருக்கிறது? இது ஜனநாயக நாடில்லையா? ஒருவருக்கு தனது கருத்துரிமையை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்குமாயின் – அப்படித்தான் வெளிப்படுத்த வேண்டும். அதில் இருக்கும் தவறு என்ன? அப்படி பகிரங்கமாக விமர்சிக்கக் கூடாத அளவுக்கு யோக்கியமானதா இஸ்ரேல்? அல்லது அவர்களை விமர்சித்தால் இவர்களுக்கு ஏன் வலிக்கிறது?

80 – 90 களில் ஜே.வி .பி போராட்டக்காரர்கள் – ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டபோது, அதற்கெதிராக போஸ்டர் ஒட்டி நியாயம் கேட்ட இதே ஜே.வி.பி – இன்று தனிமனிதன் ஒருவன் சுவரொட்டியால் நீதி கேட்கும்போது, அவன் முதுகெலும்பை முறிக்க முயல்வது ஏன்?

சாதாரண ஒருவனின் நீதி கோரலை – முளையில் கிள்ளினால் அதற்கு மேல் எவனும் வாய் திறக்க மாட்டான் என்ற ஜே.வி.பி அடக்குமுறைக்கு, பிரேமதாச அரசாங்கம் பின்பற்றிய அதே கொள்கையை இந்த அரசாங்கமும் பின்பற்றுவது காலத்தின் கோலம்; கொடுமை.

ஜனாதிபதி அனுரகுமார – இந்த விடயத்தின் ‘சீரியஸ்’ தன்மை அறியாமல் , கோட்டா காலத்து ஆலோசகர்கள் போன்ற அறிஞர்களின் உபதேசங்களை பெற்றுக்கொண்டு வருகிறார்.

அதில் இருந்து வெளியே வந்து உடனடியாக இளைஞர் ருஷ்தியை விடுதலை செய்ய வேண்டும்.

அப்படியல்லாமல் இஸ்ரேல்தான் முக்கியம், இவனுகள் யார் நமக்கு ?என்று அடம்பிடிப்பாராயின் பிடிக்கட்டும்.

காலம் விசித்திரமானது அது பல பாடங்களை தந்துவிடும்’ என சிவராஜா தெரிவித்துள்ளார்.

இளைஞர் ருஷ்டி ஒட்டிய ஸ்டிக்கரில் ‘Fuck Israel’ எனும் வாசகம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.