
பயங்கரவாத தடைச் சட்டத்தை விமர்சித்துக் கொண்டு அதனை பயன்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பாதுகாத்து விட முடியாது என, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான அனைத்து தடுப்பு கட்டளைகளும் பாதுகாப்பு அமைச்சரினால் மாத்திரமே கையொப்பமிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவு ஒன்றில் இந்த விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ‘தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க. பயங்கரவாத தடைச் சட்டத்தை விமர்சித்துக் கொண்டு அதனை பயன்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பாதுகாத்து விட முடியாது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் நிற்கின்றவர்களும் அதனுடன் தேர்தலில் நிற்கின்றவர்களும் தமது கட்சியை பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டால் நீங்களும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பொய்யான அரசியலையே செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.
பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல தசாப்தங்களாக செயல்பாட்டாளர்கள் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். வெறுமனே தேர்தல் பிரச்சாரத்திற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கொடூரமான தன்மையையும், அது எவ்வாறு – நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையுடன் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையையும் மறைக்க வேண்டாம் என்று தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.



