
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவரை விடுதலை செய்வது, அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை மீறும் செயல் என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவோ அல்லது அரசாங்கமோ அத்தகைய முடிவை எடுக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர்; சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதும், சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக நடத்துவதுமே அரசாங்கத்தின் மக்கள் ஆணை என்றும், இந்த ஆணையை மீறும் வகையில் ஜனாதிபதி எந்தவொரு முடிவையும் எடுக்கமாட்டார் என்றும் குறிப்பிட்டார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று, பௌத்த பிக்குகளின் குழுவொன்று விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்றும், அவ்வாறு செய்வது அரசாங்கத்தின் மக்கள் ஆணையை மீறும் செயலாகும் என்றும் அவர் கூறினார்.
“எந்தவொரு சூழ்நிலையிலும் எங்களால் மக்கள் ஆணையை மீற முடியாது. ஜனாதிபதி இந்த மக்கள் ஆணையை மீறும் வகையில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளைத்தான் முன்வைக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே தற்காலிகக் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளின் குழுவினர், இன்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அந்தக் கூடாரங்களை அகற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.



