
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, ஞானசார தேரர் கட்டாயப்படுத்தி – சிறை உடை அணிய வைக்கப்பட்டார் என, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் தெரிவித்த குற்றச்சாட்டை – சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
கொழும்பில் ஒக்டோபர் 12 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய உதய கம்மன்பில, ஞானசார தேரர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோரின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், தேரர் கட்டாயப்படுத்தி சிறை உடை அணிய வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக பல்லேத்தன, இச்சம்பவம் தொடர்பான எந்த முறைப்பாடுகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குக் கிடைக்கவில்லை என்று கூறினார்.
அத்தகைய சம்பவம் எதுவும் தனக்குத் தெரியாது என்று கூறிய அவர், சிறைச்சாலை விதிமுறைகளுக்கு ஏற்பவே சிறைச்சாலை அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்பதை வலியுறுத்தினார்.
“இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக எங்களுக்கு எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. அத்தகைய சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியாது. சிறைச்சாலை விதிமுறைகளை நாங்கள் பின்பற்றுவதால், அத்தகைய நிகழ்வு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சிறையில் உள்ள மதத் தலைவர்களுக்கான சிறை உடை விதிமுறைகளை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு குறித்துக் கருத்துத் தெரிவித்த பல்லேத்தன, சிறைச்சாலைகள் ஆணையாளர் கஜநாயக்க அக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்த பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை அக்குழு இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ சமர்ப்பிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சிறைச்சாலைச் சட்டங்களின் கீழ் – தற்போதுள்ள நடைமுறைகளில் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்ய முடியாது என்பதைக் குறிப்பிட்ட பல்லேத்தன, அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சிறைச்சாலைகள் திணைக்களம் செயல்படும் என்றும் கூறினார்.



