தலைப்புச் செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கிடையிலான கலாசார நிகழ்வு: ‘மாப்பிள்ளை ஊர்வலம்’ நிகழ்வை அட்டாளைச்சேனை கல்லூரி அரங்கேற்றியது

– எம்.ஜே.எம். சஜீத் –

இலங்கையின் கல்வியியற் கல்லூரிகளில் பயிலும் எதிர்கால ஆசிரியர்களின் கலை, கலாசாரம் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Inter-College Cultural Show – 2026’  கலாசார நிகழ்வு நேற்று (13) நாகானந்த சர்வதேச பௌத்த கற்கைகள் நிறுவனத்தில் நடைபெற்றது.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘ஒரே மேடை பல கலாசாரங்கள்; எல்லையற்ற திறமைகள்’ என்ற கருப்பொருளை வெளிப்படுத்தும் இந்நிகழ்வு, இலங்கையின் பல்வேறு கலாசார மரபுகள், பாரம்பரிய கலைகள் மற்றும் நவீன படைப்பாற்றலை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி ஆசிரிய பயிலுநர்களினால் ‘கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பாரம்பரிய மாப்பிள்ளை ஊர்வலம்’ எனும் தலைப்பில், நிகழ்வொன்று அரங்கேற்றப்பட்டது.

இலங்கையின் பன்முகக் கலாசாரப் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் நோக்குடனும், பல்வேறு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையிலும் இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இசை, நடனம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலாசார அம்சங்கள் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளதுடன், கல்வியியற் கல்லூரிகளின் பயிலுநர் ஆசிரியர்கள்- தமது திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்தது.