தலைப்புச் செய்திகள்

மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட 181 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

பேலியகொடவில் உள்ள ஒரு சுங்கக் களஞ்சியத்தில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ​​இலங்கை சுங்கத்துறையினர் ரூ. 181.93 மில்லியன் மதிப்புடைய ஹஷிஷ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.

மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட மூன்று பொட்டலங்களுக்குள் 18.193 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய விசேட பரிசோதனையின் போது – இந்த சந்தேகத்திற்கிடமான பொட்டலங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றை எடுத்துச் செல்ல வந்தவர்களைப் பிடிப்பதற்காக அவை பின்னர் தடுத்து வைக்கப்பட்டன.

இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்குள் பொட்டலங்களைக் கோர யாரும் முன்வராததால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் அவை திறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

சுங்கத்திணைக்களத்தின் முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.