தலைப்புச் செய்திகள்

கோட்டாவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு

ஈஸ்டர் தினை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு – அவர் விடுத்த கோரிக்கையை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) நிராகரித்தது.

மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, மேலதிக வைத்தியப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரியே கோட்டாபய ராஜபக்ஷ இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், அவர் மீது இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளின் போது, ​​முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணைகள் ஒரு முதிர்ந்த கட்டத்தை எட்டியுள்ளதாக – மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார். இருப்பினும், அந்தச் சமயத்தில் அவர் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருக்கவில்லை.

இந்த விண்ணப்பம் மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியபோது, கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் ​​முன்னாள் ஜனாதிபதி ஆஜராகியிருந்தார்.

இதற்கிடையில், மற்றொரு சட்ட நடவடிக்கையாக, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் – தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி, கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் மார்ச் 5, 2027 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.