தலைப்புச் செய்திகள்

ராஜங்கனே சத்தாரத்னவுக்கு பிடியானை

சமூக ஊடகங்களில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ராஜங்கனே சத்தாரத்னவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளது.

அவரது பிணைதாரர்களுக்கு அறிவிப்பாணைகளை அனுப்பவும் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) முன்வைத்த சமர்ப்பணங்களை அடுத்தே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக, இந்த வழக்கு பெப்ரவரி 24, 2027 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பௌத்த துறவற அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட ராஜங்கனே சத்தாரத்ன, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் – முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அனுராதபுர புனித நகரில் ஏற்பட்ட பதற்றமான சூழல் தொடர்பான மற்றொரு வழக்கில், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.