
அனோஜன் சிவாராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, சஊதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளதாக, வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவொன்றிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அனோஜன் சிவராசாவுக்கு பெரும் நிம்மதி’ எனக் குறிப்பிட்டு அவர் எழுதியுள்ள அந்தப் பதிவில், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, சஊதி உச்ச நீதிமன்றம் நேற்று 13ஆம் திகதி ரத்துச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
‘இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான ராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாகவே இது சாத்தியமானது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சஊதி அரேபிய அரசாங்கத்துக்கும், அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நமது தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இலங்கை மற்றும் சஊதி சட்டக் குழுக்கள் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என, அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



