தலைப்புச் செய்திகள்

கல்முனை வலயப் பாடசாலையொன்றில் 20க்கு மேற்பட்ட மாணவர்களிடம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பாலியல் சேட்டை: பொலிஸார் வலை வீச்சு

– பாறுக் ஷிஹான் –

ல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில், பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் இடம்பெற்றபோதே இந்த தகாத சம்பவம் நடந்துள்ளது.

சுகாதாரப் பரிசோதனையின் போது, குறித்த அதிகாரி தங்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து, கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை, பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அம்முறைப்பாட்டிற்கு அமைவாகப் இன்று புதன்கிழமை (19) பாடசாலை அதிபர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதேவேளை, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான பொதுச்சுகாதார பரிசோதகரையும் வாக்குமூலம் வழங்குவதற்கு உடனடியாகச் சமூகமளிக்குமாறு பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, முறைப்பாட்டுத் தரப்பினர் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட அதிகார சபை, கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர், பெண்கள் பொலிஸ் பிரிவினருக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.