தலைப்புச் செய்திகள்

சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: ஆலயத்திலுள்ள பாயில் மீட்கப்பட்ட விந்து, ஹேமரத்ன தேரரின் டி.என்.ஏ-வுடன் பொருந்துவதாக அறிக்கையில் தெரிவிப்பு

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட, அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரின் ஆலயத்திலிலுள்ள பாயில் இருந்து மீட்கப்பட்ட விந்து மாதிரியானது, அவரது டி.என்.ஏ-வுடன் பொருந்துவதாக விஞ்ஞானபூர்வ சான்றுகள் வெளிப்படுத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தேரரின் ஆலயத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பாயில் இருந்து அந்த விந்து மாதிரி மீட்கப்பட்டு, பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டது. அந்தப் பகுப்பாய்வில், அந்த மாதிரி – ஹேமரத்ன தேரரின் டி.என்.ஏ-வுடன் நேரடியாகப் பொருந்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பாயில் ஹேமரத்ன தேரரின் விந்து படிந்திருந்ததாக அந்தச் சிறுமி முன்னதாகக் கூறியிருந்தார்.

அந்தக் கூற்றை நிரூபிக்கும் விஞ்ஞானபூர்வ சான்றுகளை மேற்படி டி.என்.ஏ அறிக்கை வழங்குவதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புதைக்கப்பட்டதாகக் கூறப்படும், சிறுமியின் உள்ளாடை உள்ளிட்ட ஆடைகள் தொடர்பான முந்தைய தடயவியல் அறிக்கையில், வெளி நபருடைய டி.என்.ஏ மரபணுக்கள் கண்டறியப்படவில்லை.

அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் – ஏற்கனவே சட்ட மா அதிபர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக, அனுராதபுர தலைமை நீதவான் நீதிமன்றத்துக்கு பொலிஸார் நேற்று (22) தெரிவித்தனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் நடந்த இடத்தை சிறுமி அடையாளம் காட்டும் வீடியோ காட்சிகள் அடங்கிய சிடிகளும், சிறுமி வழங்கிய வீடியோ ஆதாரங்களும்- நீதிமன்றத்திலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணையின் போது, ​​முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சானக அபேவிக்ரம, சந்தேக நபரான தேரர்- நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, நீதவான்களுக்காக ஒதுக்கப்பட்ட விசேட நுழைவாயில் வழியாக நுழைந்ததாகக் கூறப்படுவதற்கு வன்மையாக ஆட்சேபனை தெரிவித்தார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சுட்டிக்காட்டிய சானக அபேவிக்ரம, இவ்விஷயம் குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த பிரதம நீதவான் சியபத் சசிது விக்ரமரத்ன, நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இரண்டாவது சந்தேக நபரான, சிறுமியின் தாயார் கைது செய்யப்படுவதற்கு முன்பு பயன்படுத்தியதாகக் கூறப்படும், இதுவரை விசாரிக்கப்படாத மூன்று தொலைபேசி எண்களை விசாரிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

அந்தத் தொலைபேசி எண்கள் குறித்த தகவல்களை சிறுமியின் பாட்டியும் மாமாவும் வழங்கியிருந்தனர்.

பாடசாலை விடுமுறைக்குப் பிறகு – பாட்டியிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன், நன்னடத்தை கண்காணிப்பில் உள்ள தனது தங்கைக்கு, அந்தச் சிறுமி வீடியோ அழைப்புகள் செய்ய அனுமதிக்கப்பட்டாள். அந்தச் சிறுமியை தடயவியல் மனநல வைத்தியரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்ற – பொலிஸாரின் கோரிக்கையையும் நீதிமன்றம் பரிசீலித்தது.

ராகம போதனா வைததியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் தயாரிக்கப்பட்ட, வைத்தியப்பரிசோதனை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரி அழைப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டன.

கொடுமையான பாலியல் வன்கொடுமை தொடர்பாக தண்டனைச் சட்டத் திருத்தச் சட்டத்தின் பிரிவு 365B(2)(b)-இன் கீழும், பாலியல் வன்புணர்வு தொடர்பாக பிரிவு 364(2)(e)-இன் கீழும் ஹேமரத்ன தேரர் மீது பொலிஸார் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கடத்தல் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக, 2006-ஆம் ஆண்டின் சட்டம் எண் 16-இன் பிரிவு 360C(1)(a)-இன் கீழும் அந்தச் சிறுமியின் தாய் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்லேகல ஹேமரத்ன தேரர் தற்போது கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழும், வெளிநாட்டுப் பயணத் தடைக்கு உட்பட்டும் உள்ளார். ஜனாதிபதி சட்ட ஆலோசகர்கள் கலிங்க இந்ததிஸ்ஸ மற்றும் அனுஜா பிரேமரத்ன உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் அவர் சார்பில் ஆஜரானார்கள்.

நிட்டம்புவ பொலிஸ் தலைமையகத்தின் பிரதம பொலிஸ் ஆய்வாளர் அனுர குணவர்தன மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகள் -அரசுத் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

சட்ட மா அதிபரின் அறிவுறுத்தல்கள் வரும் வரை, இவ்வழக்கு 8 ஜனவரி 2027 வரை ஒத்திவைக்கப்பட்டது.