
பதினாறு (16) வயதுக்கு மேல் சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி குறித்து,பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று (20) கவலை வெளியிட்டார். மாணவர்களை முழுமையாக13 ஆண்டுகாலம் கல்விக்காகப் பாடசாலையில் வைத்திருப்பதை, அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போது பேசிய பிரதமர், 16 வயது வரையிலான கட்டாயக் கல்வி சட்டத்தால் நிறுவப்பட்டிருந்தாலும், மாணவர்களை பாடசாலையில் தக்கவைப்பது வளர்ந்து வரும் சவாலாகவே உள்ளது என்றார்.
13 ஆண்டுகால கல்வியை முடிக்காமல் பாடசாலையை விட்டு வெளியேறும் சிறுவர்கள், போதுமான திறன்களும் தகுதிகளும் இல்லாமல் பணியிடத்தில் நுழையக்கூடும் என்றும், இது அவர்களைச் சுரண்டல் மற்றும் பிற அபாயங்களுக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
2026 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் நோக்கங்களில் ஒன்று, சிறுவர்கள் பாடசாலையில் தொடர்ந்து இருக்க ஊக்குவிக்கும் – ஒரு பாதுகாப்பான மற்றும் ஆதரவான கற்றல் சூழலை உருவாக்குவதாகும் என்றும் அவர் விபரித்தார்.
ஆரம்பப் பாடசாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2026-ல் ரூ. 1.9 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, பாடசாலைகளில் ஆலோசனை மற்றும் உளவியல் சமூக ஆதரவை வழங்குவதற்காக C2 மையங்களை நிறுவுதல் உள்ளிட்ட பரந்த அளவிலான மாணவர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பிரதமர் கோடிட்டுக் காட்டினார்.
சிறுவர் பராயக் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் பாடசாலைப் போக்குவரத்து ஆகியவற்றிலும் சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும், சிறுவர்களுக்கு ஓய்வெடுக்கவும் உடல்நலம் தேறவும் போதுமான நேரம் தேவை என்று கூறிய பிரதமர் ஹரினி அமரசூரிய, தற்போதைய பாடசாலை விடுமுறை நாட்களில் சிறுவர்கள் மீது அதிகப்படியான கல்விச் சுமைகளைச் சுமத்துவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார்.



