
ஏறாவூரில் தேவதாஸ் சுரேஷ் குமார் என்பவரை 2008ஆம் ஆண்டு கடத்திக் கொன்ற குற்றத்திற்காக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) முன்னாள் உறுப்பினர்கள் எட்டு பேருக்கு மரண தண்டனை விதித்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களாகக் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒன்பது பேரில், ஒருவரை மட்டும் விடுதலை செய்யுமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.ஜே. பிரபாகரன் உத்தரவிட்டார்.
2008-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தகதியன்று, அக்காலத்தில் செங்கலடி முகாமில் நிலை கொண்டிருந்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் குழுவொன்று, சுரேஷ் குமாரை வேன் ஒன்றில் கடத்திச் சென்று, அவரைக் கொன்று, உடலைப் புதைத்து, அந்த இடத்தின் மேல் – வாழைக்கன்று ஒன்றை நட்டு வைத்தமை நீதிமன்றத்தில் வெளிப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் – ஈ.பி.டி.பி. அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்பது பேரைக் கைது செய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக 2016-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேனும் விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கண்டெடுக்கப்பட்டது.
நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் எட்டு பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இன்று நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் அனைவரும், மட்டக்களப்பு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



