தலைப்புச் செய்திகள்

“வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்”: டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பேராசிரியர் பாஸில்

– றிசாத் ஏ காதர் –

வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் வலியுறுத்தினார்.

வேகமாக மாறிவரும் உலகில் வெறுமனே சான்றிதழ்களையும் பட்டங்களையும் பெற்றுக்கொள்வதுடன் நின்றுவிடாமல், காலத்தின் தேவைக்கேற்ப தொழில்சார் திறன்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம் எனவும் அவர் கூறினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் ஏற்பாட்டில், ஆலோசனை வழங்கலில் தொழில்முறை டிப்ளோமா மற்றும் ஊடகவியல் டிப்ளோமா ஆகிய பாடநெறிகளை நிறைவு செய்த 85 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (21) பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே, பேராசிரியர் பாஸில் இந்த விடயங்களைக் கூறினார்.

இவ்வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், 2018/2019 கல்வியாண்டில் ஆலோசனை வழங்கல் (Counselling) டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த 48 மாணவர்களும், 2022/2023 கல்வியாண்டில் ஊடகவியல் (Journalism) டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த 37 மாணவர்களுமாக மொத்தம் 85 பேர் தமது டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

இங்கு தொடர்ந்து பேசிய பேராசிரியர் பாஸில்; “செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் உலகின் அனைத்து துறைகளிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

1995ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னணியையும், 2000ஆம் ஆண்டளவில் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையம் நிறுவப்பட்ட வரலாற்றையும் நினைவுகூர்ந்த அவர், இந்நிலையத்தின் ஊடாக இதுவரை ஏறத்தாழ 4,000 பட்டதாரிகளும் 500க்கும் மேற்பட்ட டிப்ளோமாதாரர்களும் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத் துறைகளிலும் வெளிவாரிப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிகள், வேலையின்மை, குடும்பப் பிரச்சினைகள், சமூக மாற்றங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் எனப் பல்வேறு சவால்களை மனித சமூகம் எதிர்கொண்டு வரும் இக்காலகட்டத்தில், உளவள ஆலோசனை வழங்குநர்களும் பொறுப்புணர்வுள்ள ஊடகவியலாளர்களும் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாம் பெற்றுக்கொண்ட அறிவையும் திறன்களையும் சமூகத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தி, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளாக டிப்ளோமாதாரர்கள் உருவாக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எம்.சி.ஏ. நாசர் தனது உரையில், ஆலோசனை வழங்கல் மற்றும் ஊடகவியல் ஆகிய இரு துறைகளும் சமகாலச் சமூகத்தின் தேவைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டவை எனக் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிகள், குடும்பப் பிரச்சினைகள், கல்விச் சுமைகள், தனிமை மற்றும் பல்வேறு உளவியல் பாதிப்புகளால் சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கு உரிய வழிகாட்டலையும் தீர்வுகளையும் வழங்குவதில் ஆலோசனை வழங்குநர்களுக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, ஊடகவியலாளர்கள் செய்திகளை விரைவாக வெளியிடுவதைவிட அவற்றின் உண்மைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தி சமூகத்திற்கு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் உருவாகும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தொழில்சார் ஒழுக்கநெறிகளையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், டிப்ளோமா சான்றிதழுடன் தமது கற்றலை நிறுத்திவிடாமல், முதுகலை மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகள் உள்ளிட்ட மேலதிகக் கல்வி வாய்ப்புகளையும் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஊடகக் கற்கை நெறியின் இணைப்பாளரும் சிரேஷ்ட பேராசிரியருமான எம்.ஏ.எம். றமீஸ் உரையாற்றுகையில், ஊடகவியலாளர்கள் எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியது அடிப்படைப் பொறுப்பாகும் என்றார்.

குறிப்பாக, வெள்ள அனர்த்தங்கள், நீரில் மூழ்குதல், வீதி விபத்துகள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களைத் தடுத்து உண்மையான தகவல்களை வழங்குவதிலும் ஊடகவியலாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவான வரலாற்றையும் அதன் பின்னணியில் மறைந்த தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்த அவர், மாணவர்கள் தமது கல்விப் பயணத்தை இத்துடன் மட்டுப்படுத்தாமல் தொடர்ச்சியான கற்றல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆலோசனை வழங்கல் கற்கை நெறியின் இணைப்பாளரும் பேராசிரியருமான ஐ.எல்.எம். மாஹிர் உரையாற்றுகையில், இன்றைய சமூகத்தில் குடும்பப் பிரச்சினைகள், திருமண முறிவுகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், கைத்தொலைபேசிப் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

X, Y, Z மற்றும் Alpha தலைமுறையினரின் சிந்தனை மற்றும் அணுகுமுறைகளில் வேறுபாடுகள் காணப்படுவதால், குறிப்பாக இளைய தலைமுறையினரின் டிஜிட்டல் உலகையும் மனநிலையையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்றவகையில் ஆலோசனை வழங்கும் திறனை ஆலோசகர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
ஆலோசனை வழங்குநர்கள் வெறுமனே ஆலோசனைகளை வழங்குபவர்களாக மட்டுமன்றி,

சமூகப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்குவதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் செயற்பாட்டுடன் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எம்.சி.ஏ. நாசர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களான பேராசிரியர் ஏ.எல்.எம். றியால், பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ், பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பேராசிரியர் கே. கணேசராஜா, சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ. பாத்திமா சப்னா உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் நிர்வாகத்துறைப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன், வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் பதிவுப் பிரிவு மற்றும் பரீட்சைகள் பிரதி பணிப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். சரிபுதீன், கற்றல் வளங்கள் பிரதி பணிப்பாளர் கலாநிதி சரீனா உம்மா கபூர், பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரதி பணிப்பாளர் கலாநிதி எம்.ஐ.எம். றியாத், சிரேஷ்ட உதவி நிதியாளர் எஸ்.எம். சஹீத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.