தலைப்புச் செய்திகள்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட சில உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதற்கான இடைக்காலத் தடையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) பிறப்பித்துள்ளது. 

பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் – தங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதித்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. 

அதன்படி, இந்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை மே 05ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்யுமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

மனுதாரர்களின் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மே 07ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மனுக்கள் மீதான விசாரணைகளை மே 16ஆம் திகதி எடுத்துக்கொள்ள திகதியிடப்பட்டது. 

அந்த திகதி வரை குறித்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் குறித்த வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி – வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தமை, சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மே 06ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், இந்த இடைக்காலத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.