
புள்ளி விபரத் திணைக்களம் நடத்திய ‘2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு’ அறிக்கை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 2024 ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் – இந்த முதற்கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் மக்கள் தொகை, அதன் வளர்ச்சி மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் தொகை பரவல் குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமான கொள்கைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை வகுப்பதில் அரசாங்கத்திற்கு மட்டுமன்றி, பிற நிறுவனங்களுக்கும் மிக முக்கியமானவை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதல் முறையாக, ‘டெப்லெட்’ கணினிகள் மற்றும் பயனர் நட்பு மொபைல் சாதனங்களை (user-friendly mobile devices) பயன்படுத்தி – மேற்படி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் இந்நிகழ்வில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும, ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக சனத் குமநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.டி.ஜி.ஏ. செனவிரத்ன மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



