
பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் நிதியுதவியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 அமைப்புகள் மீதான தடையைத் தொடரும் வகையில், இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா கையொப்பமிட்ட இந்த வர்த்தமானியில், இந்த அமைப்புகள் பயங்கரவாதத்திற்கு மீண்டும் மீண்டும் நிதி உதவி அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவற்றின் நிதி மற்றும் பொருளாதார சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
நீட்டிக்கப்பட்ட தடைக்கு கூடுதலாக, பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் மீதான தடையினையும் அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகள்:
- தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
- தமிழர் மறுவாழ்வு அமைப்பு (TRO)
- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC)
- உலகத் தமிழ் இயக்கம் (WTM)
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)
- உலகத் தமிழர் நிவாரண நிதி (WTRF)
- தலைமையகக் குழு (HQ குழு)
- தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ)
- ஜமாஅத்தே மில்லத்தே இப்ராஹிம் (JMI)
- விலாயா அஸ் செலானி (WAS)
- கனடிய தமிழர்களின் தேசிய மன்றம் (NCCT)
- தமிழ் இளைஞர் அமைப்பு (TYO)
- தாருல் அத் -தபவியா
- இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM)
- சேவ் த பேர்ல் (Save the Pearls)
தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நிதி வலையமைப்பை சீர்குலைப்பதற்கும் – அதன் தொடர்ச்சியான பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுடன் இந்த முடிவு ஒத்துப்போகிறது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.



