தலைப்புச் செய்திகள்

கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்: மேலம் மூவர் கைது

நீதிமன்றத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில், மேலும் மூன்று சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

இதன்படி, கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

நேற்று (22) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் கம்பஹா மற்றும் உடுகம்பொலவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததற்காகவும், குற்றம் நடந்ததற்கு முந்தைய நாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அதை வழங்கியதற்காகவும் கம்பஹா, மல்வத்த வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதற்கு மேலதிகமாக, சம்பவத்திற்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மற்றொரு சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியில் கொண்டு சென்று குற்றத்திற்கு உதவியதற்காக, உடுகம்பொலவைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் 19 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.