தலைப்புச் செய்திகள்

முஸ்லிம் பெண்களின் சீருடை விவகாரத்தை, சீலைக்கு மேலால் சொறியும் விடயமாக, அரசாங்கம் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது: மு.கா தலைவர் ஹக்கீம்

– மப்றூக் –

சுகாதாரத்துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்களின் சீருடை விவகாரத்துக்குத் தீர்வு காணுவதை, சீலைக்கு மேலால் சொறியும் விடயமாக – அரசாங்கம் தொடர்ந்தும் வைத்திருக்கக் கூடாது என்று, மு.கா தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் இன்று (19) நாடாளுமன்றில் கூறினார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்கள், சீருடையுடன் அவர்களின் கலாசாரத்துக்கு அமைவாக ஆடையுடுத்தமைக்கு, வைத்தியசாலை நிர்வாகம் அனுமதி மறுத்தமை தொடர்பில் பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“சுகாதார அமைச்சரை நேற்று காலையில் – எதிர்க்கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தோம்

அந்த சந்திப்பின்போது, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய சுகாதார உதவியாளர் முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் தற்காலிகமானது என்றும், அது நிரந்தர தீர்வு அல்ல என்றும் கூறினார்.

இந்த சீருடைக்கான பிரச்சினை – முஸ்லிம் சுகாதார உதவியாளர்களுக்கு மாத்திரமானதல்ல, முஸ்லிம்களாக சுகாதார சேவையில் பணியாற்றுகின்ற எல்லோருக்கும் அவருடைய கலாசார அடையாளத்தை பேணும் அடிப்படையில் உடை அணிந்து வருவதற்கான அனுமதி தரப்பட வேண்டும் என்பதை, அரசாங்கம் அங்கீகரிக்கிறதா என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்

ஏனென்றால் இதுதான் இன்று இந்த பிரச்சனைக்கு மூல காரணமாக இருக்கிறது. அரசாங்கம் இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் பக்கத்தில் இருக்கின்ற நியாயத்தை ஏற்றுக் கொண்டு, ‘அரச சேவையில், அனைத்து இடங்களிலும் – சீருடைகள் சம்பந்தமான சுற்றறிக்கைகளுக்கு அமைவாகவும், அந்த சுற்றறிக்கைகளுக்கு மேலதிகமாக, தங்களுடைய கலாசார, சமய ஏற்பாடுகளுக்கு அமைவாக ஆடை அணிவதற்கும் அந்தந்த துறைகளில் நாங்கள் இடம்பெளிப்போம்’ என்ற கொள்கை ரீதியான முடிவை, அரசாங்கம் எடுத்துவிட்டது – என்ற ஒரு செய்தியைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதை வெறும் சீதைக்கு மேலால் சொறிகிற ஒரு விஷயமாக தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு நாகரிகமான விடயமல்ல; அது ஆபத்தானதும் கூட என்பதை, சமூக வலைத்தளங்களின் ஊடாக கருத்து பரிமாணங்களைப் பார்க்கின்ற போது எங்களுக்கு புரிகிறது.

இதைத்தான் நானும் அண்மையிலே ஒரு பொது நிகழ்ச்சி பேசுகின்ற போது; ‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்று சொன்னேன். நான் இங்கு ‘முள்ளை முள்ளால்’ என்று சொல்வது, இந்தப் பிரச்சனை சுகாதார சேவையில் இருக்கிற உள்ளூர் நிர்வாகம் ஒன்றின் ஊடாகவே ஏற்பட்டது. எனவே அந்த உள்ளூர் நிர்வாகம் என்ற முள்ளை எடுப்பதற்கு, அரச மேலிடம் என்கிற அடுத்த முள்ளைப் பாவித்துத்தான் அதை நாங்கள் எடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிவதாக இருந்தால், அதை ஆபத்தில்லாமல் செய்து முடிப்பதற்கு இருக்கின்ற ஒரே வழி, ‘சுற்றறிக்கையில் இருக்கின்ற குறைபாடுகளை நீக்குவதற்கு நாங்கள் கொள்கை ரீதியாக முடிவெடுத்துவிட்டோம்’ என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதைச் செய்வதற்கு ஒரு சில நாட்கள் அல்லது வாரங்கள் தாமதமானாலும் இந்த பதட்ட நிலை தணிவது மிக அவசியமாகும்” என்றார்.

இதேவேளை, அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்ட சுற்று நிரூபத்தையும் இதன்போது அவர் வாசித்துக் காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம்;

”கல்முனை வடக்கு வைத்தியசாலை நிர்வாகம் இந்த நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது என்பது மிக தெளிவான விஷயம். எனவே, பழைய சுற்றறிக்கை மீளை கொண்டு வருகிறோம் என்று அறிவித்தாலே போதுமானது. இப்படி சின்ன விஷயத்தை செய்வதன் மூலம், பாரியதொரு குழப்ப நிலையை தவிர்ப்பது என்பது, அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல – இந்த நாட்டிலே சமாதானத்தை விரும்பும் அனைவருக்கும் தேவையானது.

கல்முனையில் இன முரண்பாடுகள் ஆங்காங்கே இருந்தாலும், கல்முனை வடக்கு வைத்தியசாலையில் நடந்த சில விஷயங்களையும் நாங்கள் பாராட்டி பேசத்தான் வேண்டும். அங்கு நோன்பு காலங்களிலே – முஸ்லிம்கள் கூட்டாக நோன்பு திறப்பதற்கும் அனைத்து இன சகோதரர்களும் சேர்ந்து நோன்பு திறப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதை நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.

அதேபோல அங்கு முஸ்லிம்கள் தொழுவதற்கான தொழுகை அறையும் ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது. அதையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

அதே நேரம் தேவையில்லாமல் அங்கு இருக்கிற சுகாதார சேவை உத்தியோகத்தர்களைப் பாவித்து ஆர்ப்பாட்டம் செய்வதும், ஊடக சந்திப்பு நடத்துவதும் கூட ஒழுக்காற்று நடவடிக்கைக்குரிய விடயம் எனக் கூறப்படுகிறது.

தாங்கள் இந்த சேவைக்கு வந்து – சில நாட்களுக்குள்ளாகவே, இன்று பலவந்தமாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிற அநீதி – உடனடியாக நீக்கப்படுவதற்கு அரசாங்கம் முடிவு எடுக்க வேண்டும். அதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

எங்களுடைய நாட்டிலே மிகக் குறைவாகத்தான் பெண்கள் வேலைக்குச் செல்கின்ற வீதாசாரம் இருக்கிறது. 32 வீதமான பெண்கள்தான் வேலைக்கு செல்கிறார்கள். அதுவும் ஆடைத் தொழிற்சாலைகள் இல்லை என்றால், பெண்கள் வேலைக்கு செல்வது குறைவாகி விடும்.

ஆடை தொழிற்சாலைகள் இருக்கிற காரணத்தினால் பெண்கள் வேலைக்குச் செல்வது 32 வீதமாக இருக்கிறது. நேபாளத்தை விடவும் இது குறைவு. எங்களை விட குறைவாக பாகிஸ்தான் மாத்திரம்தான் உள்ளது. இப்படி குறைவாக பெண்கள் வேலைக்கு செல்வது, பொருளாதாரத்துக்கு பாதிப்பான விஷயம் என்பதையும் பொருளாதார வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.

நமது நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களில் பௌத்தர்கள் 83 சதவீதம் இருக்கிறார். இந்துக்கள் 10.6 வீதம் உள்ளனர்.ஆனால் முஸ்லிம்கள் 4.1 வீதமாகவே உள்ளனர். அதிலும் பெரும்பான்மையானோர் கல்வித் துறையில்தான் உள்ளனர். ஏனைய துறைகளுக்குச் செல்ல இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார்.