
– பாறுக் ஷிஹான் –
ஒன்பது வயது பாடசாலை மாணவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
துஸ்பிரயோகத்துக்கு உள்ளான தரம் 04 இல் கல்வி பயிலும் பாடசாலை சிறுவனின் பெற்றோர் நேற்று (13) செய்த முறைப்பாட்டுக்கு அமைய – சந்தேக நபரான 38 வயது ஆரம்ப கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இச் சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி பாடசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலை மாணவனை அப்பாடசாலையின் மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்று, பலமுறை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக 38 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய – சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு – சந்தேக நபரான ஆசிரியரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை (13) முன்னிலைப்படுத்தினர். இதன்போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாணவன் – தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



