தலைப்புச் செய்திகள்

கெஹலியவின் பெயரிலுள்ள பாடசாலைக்கு வேறு பெயர் மாற்றுமாறு உத்தரவு

மத்திய மாகாணத்தின் கண்டி – வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவில் அமைந்துள்ள ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’யின் பெயரை, ‘குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை’ என மாற்றுமாறு, மாகாணத்தின் புதிய ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் பெயரை, ‘குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை’ என மாற்றுவதற்கு, மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, உத்தேச பெயர் மாற்றத்துக்கு மத்திய மாகாண ஆளுநர் நேற்று (16) அனுமதி வழங்கியுள்ளார்.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, குண்டசாலையில் உள்ள ஒரு பாடசாலைக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி – பாடசாலைகளுக்கு உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை சூட்ட முடியாது என சுட்டிக்காட்டிய இலங்கை ஆசிரியர் சங்கம், பாடசலைகளுக்கு இதையும் மீறி பெயர் சூட்டுவதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளின் தரமற்ற மருந்தை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த விடயத்தைக் கூறியிருந்தது.