முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம்: அவர் என்ன செய்தார் தெரியுமா

🕔 October 17, 2024

ருமுறை தனக்கு 05 மில்லியன் அமெரிக்க டொலர்கள் லஞ்சம் கொடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் அதனை உடனடியாக நிராகரித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இலங்கையில் நிலவும் ஊழல்கள் குறித்துப் பேசினார்.

“அது எனக்கு நடந்தது. ஐந்து மில்லியன் டொலர்கள் நாடாளுமன்றத்தில் எனது மேசைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது நான் பிரதமராக இருந்தேன். அதை எடுத்துக்கொண்டு இப்போது வெளியேறு என்று அப்போது நான் சொன்னேன். எனது அரசாங்கத்தில் இருந்த கனிஷ்ட அமைச்சரின் கணவர் அதைக் கொண்டுவந்தார். நான் உன்னைக் கைது செய்வேன் என்று கூறி – இப்போதே இங்கிருந்து வெளியேறு என்றேன்” எனக் கூறிய சந்திரிக்கா, அந்த நபருடன் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரும் இருந்ததாகத் தெரிவித்தார்.

வளர்ந்தவர்களின் – ஊழலுக்குப் பழக்கப்பட்ட மனதை மாற்றுவது சாத்தியமில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சிறு வயதிலிருந்தே விழுமியங்களை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“எங்களிடம் ஒரு ஜனாதிபதி இருந்தார், அவர் – உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள் என்று தனது அமைச்சரவையில் தெரிவித்தார். இதை அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்களிடமும் கூறி வந்தார்”.

“எல்லோரும் திருடினார்கள், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த அமைப்புதான் எமது நாட்டை சீரழித்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொழிலதிபர்கள் திட்டங்களைப் பாதுகாப்பதற்காக லஞ்சம் கொடுக்கிறார்கள். பரவலான ஊழல் இறுதியில் – நாடு வங்குரோத்தாகும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அவர் எச்சரித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்