
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நஷ்டஈடாக செலுத்துமாறு – புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தொகையில், அவர் செலுத்தி முடிப்பதற்கு மீதமாகவிருந்த 65 மில்லியன் ரூபாயையும் செலுத்தி விட்டதாக, நீதிமன்றுக்கு அவரின் சட்ட ஆலோசகர் மூலம் அறிவித்துள்ளார்.
ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், நிலந்த ஜயவர்த்தனவை மொத்தம் 75 மில்லியன் ரூபாயை நஷ்டஈடாகச் செலுத்துமாறு உச் ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து அவர் 10 மில்லியன் ரூபாயை செலுத்தியிருந்தார். இந்த நிலையில் இந்த இறுதிக் கட்டணத்துடன் – முழுத் தொகையும் இப்போது செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை தடுக்கத் தவறியதாக உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு 75 மில்லியன் ரூபாயும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெணான்டோ 50 மில்லியன் ரூபாயும், முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாயும் நட்டஈடாக செலுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தத் தொகை – ஈஷ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக வழங்கப்படும்.



