அனுர குமாரவின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, அதிர்ந்த ஜோதிடர்: அம்மா சீலாவதி வழங்கிய பேட்டியில் தெரிவித்த ஆச்சரியத் தகவல்

🕔 September 29, 2024

“ஒரு முறை பௌத்த விகாரையொன்றின் மதகுரு – அனுரகுமார திசாநாயக்கவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார். அப்போது அவருக்கு 12 வயது. நான் அதனை ஏற்கவில்லை” என, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தாயார் டி.எம். சீலாவதி தெரிவித்துள்ளார்.

‘சன்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அனுர குமார திசாநாயக்க பிறந்து 06 மாதத்தில் அவரின் ஜாதகத்தை சோதிடர், ஒருவரிடம் காட்டியபோது, அவர் அதிர்ந்ததாகவும், “உன் மகன் ஒரு நாள் அரசாள்வான்” என்று கூறியதாகவும், சீலாவதி குறிப்பிட்டுள்ளார்.

“பொலிஸார் அவரை தேடிக்கொண்டிருந்ததால் தனது தந்தையின் இறுதி நிகழ்வில் அனுரகுமார கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது”.

“மகன் பிறந்து ஆறாம் மாதம் நான் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் கொண்டுபோய் கொடுத்தேன். அவர் அதிர்ச்சியடைந்து, எனது முகத்தை பார்த்துவிட்டு ’உங்கள் மகன் ஒரு நாள் அரசாள்வான்’ என்றார்” என, ஜனாதிபதியின் தாயார் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தாயாரை பேட்டி காண்பதற்காக சந்திக்கச் சென்ற ஊடகவியலாளர், அங்கு அவர் கண்ட விடயங்களை இவ்வாறு விவரிக்கின்றார்.

ஜனாதிபதியின் சகோதரி சிரியலதா – சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவரின் அம்மாவிடம் என்னை அழைத்துச்சென்றார். தாயார் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்தார்.

“அம்மா ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு செய்தியை பார்ப்பார். எனது சகோதரன் தொலைக்காட்சியில் தோன்றும்போதெல்லாம், எனது மகனா என கேட்பார்” என்கிறார் சகோதரி சிரியலதா.

“அம்மா மீது எனது சகோதரனுக்கு பாசம் அதிகம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவை வந்து பார்ப்பார்” என்கிறார் அவர்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிறு வயது நாட்களை அவரது அம்மா நினைவுகூர்ந்தார்.

“அவர் பட்டம் விடுவார். நீச்சலடிப்பதில் அதிக நேரத்தை செலவிடுவார். அருகிலுள்ள நலாச்சியா குளத்துக்கு செல்வார். அது வீட்டிலிருந்து ஐந்து நிமிட தொலைவில் உள்ளது” என்றார் ஜனாதிபதியின் தாயார்.

தனது மகன் வாசிப்பின் மீது தீவிர ஆர்வம் உள்ளவர் என்கின்றார் ஜனாதிபதியின் தாயார். “புத்தகங்கள் அவருக்கு சாப்பாடு போன்றவை. எங்கள் வீட்டுக்கு அருகில் அரலிய மரம் உள்ளது. மரத்தின் கிளையில் அமர்ந்திருந்து வாசிப்பார்” என சிரித்தபடி அவர் கூறினார்.

‘உணவு உண்பதற்காக மேசையில் அமர்ந்தால் அவருக்கு புத்தகமோ அல்லது பேப்பரோ தேவை. படியுங்கள் என நான் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்றும் இருந்ததில்லை. அவர் தானாகவே படிப்பார்” என்றார்.

“அனுரவின் தந்தை நிலஅளவையாளர் ஆணையாளர் திணைக்களத்தில் பணியாற்றினார். அவர் 1982இல் காலமானார். அதுவே எங்களுக்கு மிகவும் கஷ்டமான காலம். எனினும், அது தனது பயணத்தை தொடர்வது குறித்த அனுரவின் மன உறுதியை அதிகரித்தது” என்கிறார் சீலாவதி.

“உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையே அனுர குமாரவின் அரசியல் ஆர்வம் தீவிரமடைந்தது. அவ்வேளை அவர் கொலைமிரட்டல்களை எதிர்கொண்டிருந்தார். அவருக்கு நெருக்கமாக இருந்த அவரது தந்தையின் சகோதரர் கொல்லப்பட்டார். எனது மகன் இன்றுள்ள நிலையை பார்த்து நான் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்” என, சீலாவதி மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்