
ரி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர், நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுங்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமெடில்ல பகுதியில் உள்ள கடை ஒன்றின் மேல் மாடியில் இருந்து – நேற்றிரவு ரி-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கியின் வரிசை எண் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கும்பலொலுவ பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஓய்வுபெற்ற ராணுவ சிப்பாய் ஆவார்.
இதேவேளை, நேற்று (26) பிற்பகல் நாவுல அம்பனா, அரிஸ்டன் வீதி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொங்கஹவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர்.
மேலும், மற்றுமொரு சந்தேகநபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் எதிமலே, தேரதுப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் எதிமலே குளம் பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார்.



