மன்னாரில் பாடசாலைகளுக்கு அண்மித்துள்ள மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் றிஷாட் கோரிக்கை

🕔 September 27, 2024

ன்னாரில் பாடசாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதியை அண்மித்து திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் ஆதாயத்துக்காக மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது முன்னைய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது எனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் றிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் பிரதான வீதியில் பாடசாலைகள், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மேற்படி மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் வரை மதுபானசாலைக்கு எதிராக பிரதேசவாசிகள் போராட்டம் நடத்தியதாக, தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள றிஷாட் பதியுதீன்;

“இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, இந்த மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதியை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குடியிருப்பாளர்களின் நல்வாழ்வு, குறிப்பாக இளம் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், மேலும் நீதி மற்றும் நியாயம் மேலோங்குவதை உறுதி செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் நம்புகிறோம்” எனவும் தனது கடிதத்தில் றிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்