
அனுராதபுரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அவரே திட்டமிட்டு நடத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரேமரத்னவின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் வாகனத்தின் மீது, காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தனது வீட்டுக்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு – தன்னுடைய வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் உதவியுடன் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டை ஏற்பாடு செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேற்குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் – நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசிப்பதாகவும், அவர் இலங்கையை விட்டு வெளியேறிய போது பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை அல்லது தேவையான அனுமதியைப் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் தொடர்பு பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இது தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்ட நேரத்தில் – சந்தேக நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் குறிப்பிட்டார்.
மலேசியா செல்வதற்காக நேற்று முன்தினம் (12) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தனது உத்தியோகபூர்வ ஆயுதத்தை மூன்றாம் தரப்பினரின் ஊடாக அவர் இணைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பியதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
மேற்படி துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை அடுத்து, உத்திக பிரேமரத்ன 2024 பெப்ரவரியில் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகினார். அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டப் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், உத்திக பிரேமரத்ன இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பான செய்தி: நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு



