
இலங்கையில் பாடசாலை மாணவர்களிடம் புகையிலைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (31) இடம்பெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் உரையாற்றிய தேசிய அபாயகர போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் டொக்டர் ஷக்ய நாணயக்கார, பாடசாலைகளில் புகையிலைப் பாவனை அதிகரித்துள்ளதாக கூறினார்.
இந்தப் பொருட்களுக்கு அடிமையாகும் பிள்ளைகள் சிகரெட் புகைக்கும் நிலைக்கு செல்லும் சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளவில் இ-சிகரெட் பிரபலமடைந்து வருகின்றமை பற்றி பேசிய அவர், இ-சிகரெட்டுகள் மூலம் நிகோடின் பழக்கத்தை உருவாக்கும் நபர்கள் – பாரம்பரிய சிகரெட்டுகளை புகைப்பதில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று எச்சரித்தார்.
மேலும், நிகோடின் உட்கொள்வதால் தலைச்சுற்றல், வாந்தி, மற்றும் பொதுவான உடல் அசௌகரியம் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
அந்தவகையில், நிகோடினின் ஆபத்துக்கள் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான காரணங்கள் குறித்து பிள்ளைகளுக்கு படிப்பிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை டொக்டர் நாணயக்கார வலியுறுத்தினார்.



