
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், அவர் நீதிமன்றின் ஆஜராகியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளின்போது ஆஜராகத் தவறியதால், அவருக்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கை வந்திருந்தபோது, கொழும்பு – தும்முல்லையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து நடத்தப்பட்ட 2016-ஆம் ஆண்டு போராட்டத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவராக வீரவன்ச பெயரிடப்பட்டுள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்தப் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தார்.
இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தனது வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே குறித்த நேரத்தில் வர முடியாமல் தாமதம் ஏற்பட்டதாக, அவரின் சட்டததரணி மஞ்சுல பத்திராஜ விளக்கமளித்தார். அத்துடன், பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையைத் திரும்பப் பெறுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இத்தகைய கோரிக்கையை நாளை முறையான மனுவொன்றின் ஊடாகவே முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதம நீதவான், அதுவரை பிடியாணை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.



