
– அஹமட் –
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவை – ஒரு வார காலத்துக்கு எந்தவொரு அதிபரோ ஆசிரியரோ நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று, அந்தக் காரியாலயத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் உத்தரவிட்டமை தொடர்பில், பெரும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு வலயக் கல்வி அலுவலகத்தை தமது தேவைகளுக்காக அதிபர்களும் ஆசிரியர்களும் ஒரு வார காலத்துக்குத் தொடர்பு கொள்ளக் கூடாது என்று, இவ்வாறு உத்தரவிடுவதற்கு – குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு, எந்தவித அதிகாரமும் கிடையாது என்று, புதிது செய்தித்தளத்தின் கவனத்துக்கு, இந்த விடயத்தைக் கொண்டு வந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர், ஒலி வடிவில் பேசி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் கூறுகையில்;
“அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவில் – மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பின் பேரில், சகல ஆசிரியர்களுடைய தகவல்களையும் ஒன்லைனில் பதிவேற்றும் பணிகள் முழுமையாக நடைபெறுகின்றன.
அதனால், எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையில், எந்த ஒரு ஆசிரியரோ அதிபரோ, எந்தவொரு உத்தியோத்தரோ, நிர்வாக பிரிவுக்கு எந்த பணிகளுக்கும் வர வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏனென்றால் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம், நாங்கள் அவசர நிர்வாக பணி வேலைகளை ஒன்லைன்-இல் செய்து கொண்டிருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே, எந்த ஆசிரியரும் அதிபரும் நிர்வாக பிரிவுக்கு – எந்த பணிகளுக்கும் வரவும் வேண்டாம், தொலைபேசியில் எங்களுடைய தொடர்பானஉத்தியோதரை தொடர்பு கொள்ளவும் வேண்டாம்” எனக் கேட்டு கொள்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவித்தலை புதிது செய்தித்தளத்துக்கு அனுப்பிய ஆசிரியர்கள்; இவ்வாறு ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் வலயக் கல்வி அலுவலகம் கதவடைக்க முடியாது என்றும், அவ்வாறு அலுவலகத்துக்கு பணி நிமித்தம் வரக் கூடாது என உத்தரவிடுவதற்கு, குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு அதிகாரம் கிடையாது எனவும் தெரிவித்தனர்.



