
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருமாறு, அவரின் தாயார் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்-இல் கருத்து வெளியிட்ட விவகாரத்தில், அனோஜனுக்கு சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அனோஜனின் தாயார் அழுதவாறு, ”எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்” என கோரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ”எனது மகன் செய்தது பிழைதான்” எனக் கூறும் அனோஜனின் தாயார், தனது மகனை மீட்டுத் தருமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கிறார்.
பேஸ்புக்-இல் முகம்மது நபியை மிக மோசமாக அவமதித்து எழுதிய குற்றத்துக்காக அனோஜனுக்கு ஆரம்பத்தில் 05 வருட சிறைத் தண்டனையினையும் 03 மில்லியன் றியால் அபராத்தையும் சவூதி அரேபிய நீதிமன்றம் விதித்தது.
இதனையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, அனோஜன் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேன்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், தற்போது அனோஜனுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அனோஜனுக்கு உதவ – இலங்கை அரசாங்கம் சட்டரீதியான மற்றும் ராஜதந்திர ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் சவூதி அரசிடம் கருணை கோருவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என, ‘நியூஸ் வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் – சவூதி அரேபியாவில் பணியாற்றிய போது, முகம்மது நபியை அவமதித்து எழுதிய குற்றச்சாட்டில் சிக்கிக் கொண்டார்.



