
தனக்கு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குமாறு, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்குமாறு மூத்த பௌத்த பிக்குகளிடம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் செல்லுபடியாகாது என அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
ஞானசார தேரர் எழுதிய நூல் வெளியீடு கொழும்பு – தும்முல்லையில் நேற்று (20) நடைபெற்ற போது, உரையாற்றுகையிலேயே ஞானசார தேரர், மகா சங்கத்தினரிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் நடந்துகொண்ட விதம் காரணமாக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் – ஞானசார தேரருக்கு 06 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து 09 மாதங்கள் அந்தத் தண்டனையை ஞானசார தேரர் அனுபவித்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கினார்.
ஆனால், அந்த மன்னிபு செல்லுபடியாகாது என, உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. இதன் காரணமாக, ஞானசார தேரர் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த 17ஆம் திகதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை ஞானசார தேரர் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து, இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மற்றொரு வழக்கில், செப்டம்பர் 18 அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான ஞானசார தேரர், தனது குற்றசத்தை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கு இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பொதுமன்னிப்பு வழங்கியபோது அதிகாரிகளால் இழைக்கப்பட்ட நிர்வாக ரீதியான தவறுகளைச் சரிசெய்து, முறையான நடைமுறையின் ஊடாக தனக்கு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமா திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்குமாறு அவர் மூத்த பௌத்த பிக்குகளை வலியுறுத்தினார்.
சட்டத்தையும் பௌத்தக் கோட்பாடுகளையும் மதிப்பதாகக் கூறிய ஞானசார தேரர், நடைமுறைசார் பிழைகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் – அதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையே சாரும் என்றும், அந்தப் பிழைகளுக்காகத் தன்னைத் தண்டிப்பது நியாயமற்றது என்றும் வாதிட்டார்.
மீண்டும் சிறைக்குச் செல்லத் தான் அஞ்சவில்லை என்று கூறிய அவர், இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நாட்டின் மற்றும் பௌத்த மதத்தின் நலன் சார்ந்து குரல் கொடுப்பதிலிருந்து இளம் பௌத்தத் துறவிகளைத் தயங்கச் செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.
தனது நிலைமை குறித்த நிச்சயமற்ற தன்மையைக் குறிப்பிட்ட ஞானசார தேரர், தனது 87 வயதுடைய தாயாரின் முன்னிலையில் – தனக்காக ‘ஜீவ பன்சுகுல’ (ஒருவர் உயிருடன் இருக்கும்போதே செய்யப்படும் பௌத்த இறுதிச் சடங்கு போன்ற மத அனுஷ்டானம்) ஒன்றை நடத்திக்கொள்வது குறித்தும் கூட தான் பரிசீலித்திருந்ததாகத் தெரிவித்தார்.



