
– பாறூக் ஷிஹான் –
நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்தி பெண்) என அழைக்கப்படும் பெண், சாய்ந்தமருது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் – கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு (76448) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை (13) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால் விசேட சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கல்முனை புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 2310 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இச்சந்தேகநபர் பொலிஸாரிடம் சிக்கினார்.
கணவனை இழந்த இவர், தனது உறவினர்களின் ஒத்தாசையுடன் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பொலிஸார் சோதனையிட வரும் சந்தர்ப்பங்களில், வீடுகளின் மாடிகளில் இருந்து ஏனைய மாடிகளுக்கு லாவகமாகப் பாய்ந்து தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தமையினாலேயே இவருக்கு மக்கள் ‘ஸ்பைடர் வுமன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் இரு வேறு சந்தர்ப்பங்களில், மேற்படி பெண் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைதாகியிருந்தார்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையிலும் இச்சோதனை நடத்தப்பட்டது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வி. பிரகலாதன் தலைமையில், குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வி.ஜீவரத்தினம், பொலிஸ் உத்தியோகத்தர்களான அதுவார் (91775), நிவேதன் (94680), பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சாமிலி (10669) உள்ளிட்ட குழுவினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.



