
சவூதி அரேபிய நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் அனோஜனின் குடும்பத்தினர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் தேவையான சட்டச் செலவுகளைத் தங்களால் ஏற்க இயலாது என்று கூறி, சர்வதேச உதவியை நாடியுள்ளனர்.
கல்முனை – நட்பிடிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் பெற்றோர், அவரின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவும், அவரை இலங்கைக்குத் திரும்பச் செய்யவும் உதவுமாறு கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

இஸ்லாத்தையும் முஹம்மது நபியையும் அவமதித்து எழுதப்பட்ட ஒரு பேஸ்புக் பதிவுக்காக, சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தால் அனோஜன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு – ஜூலை 31 அன்று அனுப்பிய ஒரு கடிதத்தில், சவூதி நீதிமன்றம் அவருக்குப் பின்வரும் தண்டனைகளை விதித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அவர் ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை. 03 மில்லியன் சவூதி ரியால் அபராதம். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனத்தைப் பறிமுதல் செய்தல். வழக்குடன் தொடர்புடைய சமூக ஊடகக் கணக்கை மூடுதல் ஆகியவையாகும்.
தீர்ப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று அமைச்சின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்ற சட்ட ஆலோசனையின் அடிப்படையில், மேல்முறையீடு வெற்றி பெறுவதற்கான அல்லது தண்டனைக் குறைப்புக்கான வாய்ப்புகள் “மிகவும் குறைவு” என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டிற்கான சட்டப் பிரதிநிதித்துவத்திற்கு 20,000 சவூதி ரியால்களும், மேல்முறையீட்டு மனுவைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்கு மட்டும் 5,000 சவூதி ரியால்களும் செலவாகும்.
எந்தவொரு சட்டச் செலவுகளையும் பிரதிவாதியே ஏற்க வேண்டும் என்று தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஐ.நா.விடம் விடுத்த வேண்டுகோளில், அனோஜனின் பெற்றோர், தங்கள் மகனே குடும்பத்தின் பிரதான வருமான ஈட்டுபவர் என்றும், தாங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
நீதிமன்றம் விதித்த அபராதத்தையோ அல்லது மேல்முறையீட்டைத் தொடரத் தேவையான சட்டச் செலவுகளையோ தங்களால் செலுத்த இயலவில்லை என்று கூறிய அவர்கள், அனோஜனின் தண்டனையைக் குறைப்பதற்கும் அவரை இலங்கைக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவுவதன் மூலம், மனிதாபிமான அடிப்படையில் இந்த விஷயத்தைப் பரிசீலிக்குமாறு ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளனர்.
சவூதி அரேபியாவில் இந்த வழக்கைத் தொடரத் தேவைப்படும் சட்ட நடவடிக்கைக்கும் அக்குடும்பம் நிதியுதவியையும் கோரியுள்ளது.


