தலைப்புச் செய்திகள்

பஸ் டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்து பணம் திருட்டு: காசாளர், சாரதி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

நுவரெலியாவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலைசெய்து 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில், அதன் காசாளர் மற்றும் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டு – விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 06ஆம் திகதி 85 வயதான பாதுகாப்பு அதிகாரி வெட்டிக் கொல்லப்பட்டு, 10 லட்சத்து 52,167 ரூபாய் திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.

நுவரெலியா கல்பாய பகுதியைச் சேர்ந்த கே. லோகேஸ்வரன் (85) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்ட பின்னர் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பதுளை மற்றும் மஹவ பிரதேசங்களில் வசிக்கும் 34 மற்றும் 55 வயதுடைய சந்தேகநபர்கள் – இது தொடர்பில் கைது செய்யப்பட்டு, நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் டிசம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.