தலைப்புச் செய்திகள்

மாவடிப்பள்ளி உயிரிழப்பு தொடர்பான வழக்கு: நிந்தவூர் மதரஸாவுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு நீதவான் உத்தரவு

– பாறுக் ஷிஹான் –

மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் வெள்ளத்தில் மூழ்கி மரணித்த மாணவர்கள் கற்றுவந்த – நிந்தவூர் காசிபூல் உலூம் அரபு மதரஸாவுக்கு புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை  (02) உத்தரவிட்டுள்ளது.

குறித்த மதரஸாவின் தற்போதைய நிர்வாக சபையினை கலைத்து விட்டு, புதிய நிர்வாக சபையினை உடனடியாக நியமிக்குமாறு – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு நீதவான் டி. கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதரஸாவில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மாணவர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்த போது, வெள்ளத்தில் மூழ்கி அதில் பயணித்த 06 மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து குறித்த மதரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் அதிபர் மற்றும் ஆசிரியருக்கு நேற்று 02ஆம் திகதி வரை விளக்க மறியல் விதிக்கப்பட்டது. உதவியாளர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகள் நேற்று திங்கட்கிழமை (02) சம்மாந்துறை நீதவான் டி. கருணாகரன் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் காசிபூல் உலும் மதரஸா அதிபர் மற்றும் ஆசிரியர் – தலா இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை, குறித்த மதரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் – மதரஸாவுக்கு செல்லக்கூடாது எனவும் நீதவான்  உத்தரவு பிறப்பித்தார். விசாரணையின் போது காரைதீவு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்தன நிவாரண சேவைகள் அதிகாரி ஆகியோரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கினை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்ததோடு, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரையும் அடுத்த தவணையின் போது மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.