தலைப்புச் செய்திகள்

சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட அரச இல்லம் மீளக் கையளிக்கப்படவில்லை: மின்சாரம், நீர் துண்டிப்பு

முன்னாள் ராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட அரச இல்லம் இதுவரை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.

2024 ஜனவரி 25 அன்று கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தை அடுத்து காலமான சனத் நிஷாந்த, மேற்படி வீட்டிலேயே மரணிப்பதற்கு முன்னர் தங்கியிருந்தார்.

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் மீண்டும் அரசிடம் கையளிக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

ஆயினும் – இன்றுவரை, சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த அரச இல்லம் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவில்லை. இருந்தபோதும், 27 அரச குடியிருப்புகள் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட வீட்டின் மின்சாரக் கட்டணம் மற்றும் வாடகை ஆகியவை முழுமையாகச் செலுத்தப்படவில்லை என்றும், இதனால் குடியிருப்புக்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன