தலைப்புச் செய்திகள்

ஹரீஸ், பைசலுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கக் கூடாது; அவர்கள் முன்பாக, ஹக்கீமிடம் தவம் வலியுறுத்தல்

– மரைக்கார் –

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்று உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோருக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல். தவம் – கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் வலியுறுத்தியதாகத் தெரியவருகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து போட்டியிடுவதற்கு ஆர்வமுள்ளவர்களை – கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்துக்கு அழைத்து, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று (25) கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார்.

இந்த கலந்துரையாடலில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் உட்பட, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ். உதுமாலெப்பை, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வாசித், கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் முன்னிலையிலேயே – எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸில் ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகிய இருவருக்கும் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என்று, தவம் கூறியதாக அறிய முடிகிறது.

இதன்போது அங்கு பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்; தானும் ஹரீஸும் பொதுத் தேர்தலில் போட்டியிடாது விட்டால், அதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்காமல் போகும் வாக்குளில், ஆகக் குறைந்தது 25 ஆயிரம் வாக்குகளையாவது தவம் பெற்றுக் கொடுப்பாரா எனக் கேள்வியேழுப்பியதாகவும் தெரியவருகிறது.

மேலும், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸும், றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும் எனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அங்கு கூறினார்.

கடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்டமூலங்களுக்கு, முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானங்களுக்கு மாறாக – ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் ஆதரவளித்திருந்தனர். குறிப்பாக அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்திருந்த நிலையில், அதற்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் வாக்களித்திருந்தனர்.

இதனைச் சுட்டிக்காட்டி, மேற்படி இருவருக்கும் எதிராக – அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல். தவம், தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வருகின்றார்.

நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்; கட்சி எடுக்கும் முடிவுக்கு – தான் கட்டுப்படுவதாகக் கூறினார்.

இறுதியில் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் பேசுகையில்; இங்கு கூறப்பட்ட கருத்துக்களுக்கு மாற்றமான கருத்துக்கள் மக்களிடம் உள்ளன. அவற்றினையும் கேட்டறிய வேண்டும் எனக் கூறியதோடு, அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களை இன்று (26) நடைபெறவுள்ள கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டார் எனவும் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவருகிறது.

இது இவ்வாறிருக்க, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் சொந்தச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட வேண்டுமென, இம்முறை தேர்தலில் புதிதாக போட்டியிடுவதற்கு ஆர்வமுள்ளவர்கள் நேற்றைய கலந்துரையாடலில் வலியுறுத்தியுள்ளனர்.