தலைப்புச் செய்திகள்

பஜுருத்தீனின் அறிவாற்றல், சமூகத்துக்கு பல்வேறு வகைகளில் உதவியுள்ளது: அனுதாபச் செய்தியில் நஸார் ஹாஜி தெரிவிப்பு

அட்டாளைச்சேனையை வசிப்பிடமாகவும் மருதமுனையைப் பிறப்பிடமாகவும் கொண்ட சிரேஷ்ட திட்டமிடல் உத்தியோகத்தர் ஐ.எல். பஜுருத்தீனுடைய மறைவு, சமூகத்துக்கு மிகப்பெரும் இழப்பு என்றும், அவருடைய அறிவாற்றல் சமூகத்துக்கு பல்வேறு வழிகளில் உதவியது எனவும் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவரும் தொழிலதிபருமான நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் பஜுருத்தீன் நேற்று (25) கடமை நேரத்தில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் – வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

அவரின் மரணம் தொடர்பில் வெளியிட்ட அனுதாபச் செய்தியிலேயே, மேற்கண்ட விடங்களை நஸார் ஹாஜி குறிப்பிட்டுள்ளார்.

“நண்பர் பஜுருத்தீனுடைய மரணச் செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் விடுபட முடியவில்லை. பஜுருத்தீனுடைய ஆழமான அறிவும், விசாலமான ஆங்கிலப் புலமையும் வியக்கத்தக்கன.

அவருடைய அறிவை சமூகத்துக்காகவும் அவர் அர்ப்பணித்திருந்தார். அவருடைய அபாரமான திட்டமிடலும், அறிவு ரீதியான உழைப்பும் – பல அரசியல்வாதிகளின் வெற்றிகளுக்குப் பின்னால் உள்ளதை நான் அறிவேன். அவரின் நுணுக்கமான திட்டமிடல் – பல சமயங்களில் என்னை வியக்க வைத்துள்ளன.

பஜுருத்தீனின் மரணத்தை ஏற்பதற்கு மனம் மறுத்தாலும், இறைவனின் நாட்டத்தை பொருந்திக் கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் பஜுருத்தீனுடைய இழப்பை தாங்கிக் கொள்வதற்கான மன உறுதியை அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் வழங்கி வைக்க வேண்டுமெனவும், அவருக்கு மேலான சுவர்க்கம் கிடைக்க வேண்டுமெனவும் நான் பிரார்த்திக்கிறேன்” என நஸார் ஹாஜி தனது அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.