தலைப்புச் செய்திகள்

வட போச்சே: 85 எம்.பிகளுக்கு ஓய்வூதியம் இல்லை

முன்னைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் கலைக்கப்பட்டமையினால், 85 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது. 

1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற வேண்டுமாயின் 05 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும். 

இது இவ்வாறிருக்க, தற்போது கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் பதவிக் காலம், அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை உள்ளது. எனினும் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து விட்டார்.

இதன் காரணமாக, ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் உட்பட 85 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போயுள்ளது. 

அதேநேரம், 05 ஆண்டுகள் நிறைவடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அவர் பெறும் வேதனத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். 

இதன்படி 05 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவருக்கு 21,000 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும்.

அதேநேரம் 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கு, அவர்களின் கொடுப்னவில் மூன்றில் இரண்டு பங்கு ஓய்வூதியமாக கிடைக்கும்.