மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

🕔 January 17, 2022
உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இது குறித்து பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச் சந்தித்த ஒரு தரப்பினர், கருணை அடிப்படையில் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக, அந்த மாணவி தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளார். இதனை பல்கலைக்கழக நிருவாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

“இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டதை அடுத்து, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். பின்னர் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சுமார் 400 மாணவர்களைச் சந்தித்து அவர்களிடம் தைரியமளிக்கும் விதமாக பேசினேன். நடந்த சம்பவம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், தவறு செய்தவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தினேன். தைரியமாக தங்கள் கல்வியை தொடருமாறும் மாணவர்களுக்குக் கூறினேன்” என கூறியுள்ளார்.

தற்போது ஆரம்ப கட்ட விசாரணைகள் நடந்து வருவதாகவும், அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழகத்துக்கு வெளியிலுள்ளவர்களைக் கொண்டு அமைக்கப்படும் குழுவைக் மூலம் முறையான விசாரணைகள் நடதப்படும் எனவும் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

“சம்பந்தப்பட்ட மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நடந்த சம்பவத்துக்கு பல்கலைக்கழகம் சார்பில் அந்த மாணவியிடம் மன்னிப்புக் கோரினேன். தைரியமாக அவரின் கல்வியைத் தொடருமாறும் கேட்டுக் கொண்டேன்” எனவும் உபவேந்தர் ரமீஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்வதில்லை எனும் முடிவில் குறித்த மாணவி உள்ளார் என அறிய முடிகிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுமார் 5500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் 80 வீதமானோர் பெண்களாவர்.

இது குறித்து ‘பிபிசி தமிழ்’ விரிவான செய்தியொன்றினை வெளியிட்டுள்ளது. அதனை இங்கு அழுத்தி வாசிக்கலாம்.

தொடர்பான செய்தி: செக்ஸுக்கு அழைத்த விரிவுரையாளர்; படிப்பை நிறுத்திய மாணவி; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த அசிங்கத்தை, மூடி மறைக்க முயற்சி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்