கள்ள வாக்குறுதி வழங்கினார் தவிசாளர் வாசித்: பொத்துவில் பிரதேச சபை ‘பட்ஜட்’டுக்கு எதிராக வாக்களித்த மு.கா. உறுப்பினர் ரஹீம் விளக்கம்

🕔 November 18, 2020

– மப்றூக் –

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருக்கான பதவிக் காலத்தின் அரைவாசிப் பகுதியை மட்டும் வகித்துவிட்டு, பின்னர் அப் பதவியை ராஜிநாமா செய்வதென தற்போதைய தவிசாளர் வாசித் வழங்கிய வாக்குறுதியை மீறியமையினாலேயே, அவர் இன்று சபையில் முன்வைத்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக தான் வாக்களித்ததாக, அச்சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எச். ரஹீம் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியின் கீழுள்ள பொத்துவில் பிரதேச சபைக்கான வரவு – செலவுத் திட்டத்தை, முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தவிசாளர் எம்.எஸ். வாசித் இன்று சபையில் சமர்ப்பித்த போது தோற்கடிக்கப்பட்டது.

குறித்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவர் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்த மு.கா. உறுப்பினர்களில் ஒருவரான எம்.எச். ரஹீமை ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு பேசிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக ரஹீம் மேலும் தெரிவிக்கையில்;

2018ஆம் ஆண்டு பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலின் பின்னர், அச்சபையின் தவிசாளர் தெரிவு குறித்து பேச்சுகள் எழுந்தன. அப்போது, தன்னை தவிசாளராக நியமிக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் வாசித் கேட்டுக் கொண்டார். அதேபோன்று தவிசாளர் பதவிக்கு என்னை நியமிக்குமாறு நானும் வேண்டுகோள் விடுத்தேன்.

தலா இரண்டு வருடங்கள் தவிசாளர் பதவி

இதனையடுத்து 04 வருடங்களைக் கொண்ட தவிசாளர் பதவிக்காலத்தில் தலா இரண்டு வருடங்களுக்கு என்னையும், வாசித்தையும் நியமிப்பதென முடிவானது.

இந்த நிலையில் முதல் இரண்டு வருடங்களுக்கும் தவிசாளராக இவருவரில் யாரை நியமிப்பதென கேள்வி எழுந்தபோது, அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மு.காங்கிரஸ் தலைவர் ‘டொஸ்’ (நாணயச் சுழற்சி) செய்தார்.

அந்த ‘டொஸ்’ முறையில் எனக்கே வெற்றி கிடைத்தது. அதனால் முதல் இரண்டு வருடங்களும் எனக்கே தவிசாளர் பதவி வழங்க வேண்டியிருந்தது. ஆனால், வாசித் அதனை ஏற்றுக் கொள்ளாமல் பிரச்சினைப்படுத்தினார். அதனால், முதல் இரண்டு வருடங்களுக்கும் வாசித் தவிசாளராக இருப்பார் என்றும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு என்னை தவிசாளராக நியமிப்பதென்றும் முடிவாயிற்று.

இந்த நிலையில் இந்த வருடத்துடன் வாசித்துக்கான இரண்டு வருடங்களும் முடிந்து விட்டன. ஆனால் அவர் தவிசாளர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யவில்லை.

“தேர்தலின் பின்னர் விலகுவேன்”

பின்னர் கடந்த பொதுத் தேர்தலில் வாசித் போட்டியிட்டார். அப்போதாவது தவிசாளர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு மு.கா. தலைவர் முன்பாக கேட்டுக் கொண்டோம். ‘தேர்தலுக்கு முன்பாக நான் ராஜிநாமா செய்தால், எனக்கு எதிராக ரஹீம் செயற்படுவார். ஆகவே, தேர்தலின் பின்னர் நான் ராஜிநாமா செய்கிறேன்’ என்று, வாசித் வாக்குறுதியளித்தார்.

அதன் அடிப்படையில் – பொதுத் தேர்தலில் தான் வென்றாலும் தோற்றாலும், தேர்தலின் பின்னர் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தான் ராஜிநாமா செய்து, அந்தப் பதவியை எனக்கு (ரஹீமுக்கு) வழங்கப் போவதாக, பிரசார மேடைகளில் வாசித் கூறி வந்தார்.

வாக்குறுதி தவறினார்

ஆனால், வாசித் வழங்கிய அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தொடர்ந்தும் தவிசாளர் பதவியில் இருந்து கொண்டிருக்கிறார். அவர் வழங்கிய வாக்குறுதி குறித்து ஒரு தடவை அவரிடம் நான் கேட்டபோது, ‘அது கள்ள வாக்குறுதி’ என்றார்.

எனவே, மு.காங்கிரஸ் தலைவருக்கு முன்பாகவும், மக்கள் முன்பாக பொது மேடைகளிலும் வழங்கிய வாக்குறுதிக்கு மாற்றமாக வாசித் நடந்து கொண்டமையினாலேயே, அவர் சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தேன்” என்றார்.

ரஹீம் – குரல் பதிவு

தொடர்பான செய்தி: மு.காங்கிரஸ் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பட்ஜட் தோல்வி; மு.கா. உறுப்பினர்கள் இருவர் எதிர்த்து வாக்களிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்