மு.காங்கிரஸ் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பட்ஜட் தோல்வி; மு.கா. உறுப்பினர்கள் இருவர் எதிர்த்து வாக்களிப்பு

🕔 November 18, 2020

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் (பட்ஜட்) தோல்வியடைந்துள்ளது.

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். வாசித் இன்று புதன்கிழமை சபையில் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், குறித்த வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

மொத்தமாக 21 உறுப்பினர்களைக் கொண்ட பொத்துவில் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் – 06, சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 05, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 04, தமிழ் தேசிய கூட்டமைப்பு – 03, மக்கள் விடுதலை முன்னணி – 01, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 01, மீன் சின்னம் சுயேட்சைக் குழு – 01 எனும் வகையில் கட்சிகள் உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் இன்றைய வாக்கெடுப்பின் போது வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

அதனையடுத்து ஒரு மேலதிக வாக்கினால் பொத்துவில் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

முஸ்லிம் காக்கிரஸின் உறுப்பினர்களான எம்.எச். ரஹீம், எம்.எஸ்.எம். மர்சூக் ஆகியேர், மேற்படி வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments