இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

🕔 April 30, 2017

– இறக்காமம் ஏ.எல். ஜெலீஸ் –

றக்காமம் பிரதேசத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், பொதுமக்கள் ஆவேசத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு, உரிய பதிலளிக்க முடியாத நிலையில்,  மக்கள் சந்திப்பினை விரைவாக முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாகத் தெரியவருகிறது.

இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டு 06 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம்களின் காணிகளை அபகரித்து, விகாரையமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஏற்கனவே மலையில் வைக்கப்பட்ட சிலையினை அகற்றுவதற்கு எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத மு.காங்கிரசின் தலைவர், இன்று இறக்காமம் பிரதேசத்துக்கு வருகை தந்திருந்தார்.

இதனையடுத்து மு.கா. தலைவருக்கும் – இறக்காமம் பொதுமக்களுக்குமான சந்திப்பொன்று இறக்காமம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம். ஜவாட், ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட மு.கா.வின் பிரதிநிதிகள் பலரும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது மு.கா. தலைவரிடம் அங்கிருந்த இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்தக் கேள்விகளுக்கு மு.கா. தலைவர் மழுப்பலான பதில்களை வழங்கியமையினால், அங்கிருந்த பொதுமக்கள் ஆவேசப்பட்டனர்.

மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று அங்கிருந்த மக்கள் ஹக்கீமிடம் கேட்டனர். இதற்கு “ஜனாதிபதியுடன் பேசியுள்ளேன்” என்று ஹக்கீம் பதிலளித்தார்.

அதன்போது, ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என்று பொதுமக்கள் கேட்டனர். அதற்கு “அதை இங்கு கூற முடியாது” என்று ஹக்கீம் மழுப்பினார்

எதிர்வரும் 02ம் திகதி விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடுவதற்காக இங்கு வரப் போகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அதைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று பொதுமக்கள் கேட்டபோது; “அப்படியெதுவும் நடக்காது” என்று மு.கா. தலைவர் பதிலளித்தார்.

மு.கா. தலைவரின் இந்த மழுப்பலான பதில்களின் காரணமாக, மக்கள் ஆவேசமடையத் தொடங்கினர்.

நிலைமை மோசமடைவதை அவதானித்த ஹக்கீம், அந்த நிகழ்வை முடித்துக் கொண்டு, அவசரமாக அங்கிருந்து கிளம்பினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்