மன்சூர் ஏ. காதர்: அவமானத்தைச் சுமப்பவர்

🕔 December 17, 2016

mansoor-a-cader-011– றிசாத் ஏ காதர் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் கட்சியின் செயலாளர் என்று மு.கா. தலைவரால் சூழ்ச்சிகரமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மன்சூர் ஏ. காதர் என்பவர், ஹசனலியை கட்சிக்குள்ளிருந்து ஒதுக்குவதற்காக – ரஊப் ஹக்கீமுக்கு விலைபோன ஒருவர் என்று மு.காங்கிரசின் அதியுயர்பீட முக்கியஸ்தர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

மு.காங்கிரசின் அதியுயர் பீடத்தில் உறுப்பினராக அங்கம் வகிக்காத மன்சூர் ஏ.காதர், மு.கா. தலைவர் ஹக்கீமால் சம்பளத்துக்காக நியமிக்கப்பட்ட செயலாளராக இருப்பதால், மு.கா. தலைவரின் எடுபிடியாக மட்டுமே, அவர் இயங்கும் நிலை உள்ளதாகவும் மேற்படி கட்சி முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தரான செயலாளர் நாயகம் ஹசனலிக்கு குழி வெட்டுவதற்காக, மன்சூர் ஏ. காதரை ஹக்கீம் பயன்படுத்துவதாகவும், மன்சூர் ஏ. காதர் இதற்கு ஒரு கோடாரிக்காம்பாக துணை போவதாகவும் மேற்சொன்ன முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஹசனலிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி நடவடிக்கைக்கு துணை போக வேண்டாம் என்று, மு.காங்கிரசின் பல முக்கியஸ்தர்கள் மன்சூர் ஏ. காதரிடம் கூறியபோதும், அவர் இதனைக் கணக்கில் எடுக்கவில்லை என, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

மு.கா.வின் உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ. காதர் பணியாற்றுவதற்காக, கட்சியினால் ஒரு தொகைப் பணம், சம்பளமாகக் கொடுக்கபடும் என்று, மன்சூர் ஏ. காதரின் நியமனத்தின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த உயர்பீடக் கூட்டத்தின் போது; “மிகப் பெரிய அரசியல் கட்சியான மு.காங்கிரசுக்கு சம்பளம் கொடுத்து செயலாளர் ஒருவரை நியமிப்பது என்பது, அவமானகரமானதொரு விடயமாகும்” என, உயர்பீட உறுப்பினர் கலீல் மௌலவி கூறியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

கலீல் மௌலவியின் கூற்றின்படி பார்த்தால், மன்சூர் ஏ. காதர் என்பவர் ‘அவமானத்தை சுமக்கும் ஒரு நபராக’ இருக்கின்றார்.

மு.காங்கிரசின் உயர்பீட செயலாளர் என்கிற பதவியை மன்சூர் ஏ. காதர் வகிக்கின்ற போதும், உயர்பீடத்தில் கூட்டக் குறிப்புக்களை எழுதுவதனையும், வாசிப்பதையும் தவிர, வேறு எதயும் மேற்கொள்ளும் உரிமை மன்சூர் ஏ. காதருக்குக் கிடையாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அதாவது, கட்சியின் செயலாளர் ஒருவர் உயர் பீடக் கூட்டத்தின்போது பேசப்படும் விடயங்கள் தொடர்பில், தனது சுதந்திரமான கருத்துக்களை வெளியிட முடியும். கடந்த காலத்தில் ஒரு செயலாளராக ஹசனலி, மு.கா. தலைவரின் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார்.

ஆனால், மன்சூர் ஏ. காதரால் அப்படி இயங்க முடியாது. காரணம், அவர் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய எடுபிடியாவார். மட்டுமன்றி, தான் ஹக்கீமுடைய எடுபிடி என்பதை மன்சூர் ஏ. காதரும் அறிவார்.

மன்சூர் ஏ. காதர் வகிக்கும் உயர்பீட செயலாளர் பதவிக்குரிய நபரை, மு.காங்கிரசின் தலைவரே நியமிப்பார். தலைவர் நினைத்தால் உயர்பீட செயலாளர் பதவி வகிக்கும் நபரை அந்தப் பதவியிலிருந்து நீக்கி விடவும் முடியும் என்று, அந்த நியமனம் தொடர்பில் கட்சியின் யாப்பில் கூறப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் நினைத்தால் நியமித்து, நினைத்தால் நீக்கக் கூடிய ஒரு நபர், தலைவரின் எடுபிடியல்லாமல் வேறு எவராக இருக்க முடியும்?

ஆக, கட்சிக்குள் நடக்கும் முக்கிய விவகாரங்கள் எவையும், மன்சூர் ஏ, காதருக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை. அவர் வகிக்கும் பதவிக்கு அப்படியொரு மரியாதையும் மு.காங்கிரசுக்குள் கிடையாது.

மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் கையொப்பமிட்ட ராஜிநாமாக் கடிதத்தின் பிரதியொன்றினை, நேற்று வெள்ளிக்கிழமை கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலியிடம், மு.கா. தலைவர் ஹக்கீம் கையளித்திருந்தார். இவ்விடயம் மன்சூர் ஏ. காதருக்குத் தெரியாது, தெரியப்படுத்தப்படவுமில்லை. இந்த நிலையில், சல்மானின் ராஜிநாமாக் கடிதத்தின் பிரதி ஹசனலியிடம் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியினை மறுத்து, ஊடகங்களுக்கு மன்சூர் ஏ. காதர் பேசுவது பெரும் பகிடியாகும்.

மன்சூர் ஏ. காதரை இந்த நாட்களில் மு.கா.வின் செயலாளர் என்கிற அடையாளத்துடன் பார்க்கும் போது, பரிதாபகரமாக உள்ளது. சிங்கத்தின் வேடத்தை ஓனாண் போட்டுக் கொண்டது போல் – அவர் தெரிகின்றார்.

உயர்பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட மன்சூர் ஏ. காதர், தன்னை செயலாளர் என்று பொய்யாகக் குறிப்பிட்டு, ஹக்கீமுடைய கட்டளைக்கிணங்க ஆவணங்களில் கையொப்பம் இடுவதென்பது மிகப்பெரும் மோசடியாகும்.

“மு.காங்கிரசின் அதிகாரமிக்க செயலாளராகத்தான் நான் தெரிவு செய்யப்பட்டேன், உயர்பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு, பிறகு மோசடியாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு எனது பெயர் ‘செயலாளர்’ என்று  அறிவிக்கப்படவில்லை” எனக் கூறி, ஒரு பள்ளிவாசலுக்கு வந்து, வுழுவுடன் குர்ஆனில் அடித்து மன்சூர் ஏ. காதர் சத்தியம் செய்வாரா?

மன்சூர் ஏ. காதர் அவர்களே, அம்பாறை மாவட்டத்தில் இப்போது உங்களுக்கு வேறு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா?

நீங்கள் அவமானத்தைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். விரைவாக அதிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்.

நமது மரணம், நமது பிடறியை விடவும் நெருக்கமாக இருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்