தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள்

🕔 December 1, 2016

article-mtm-048– முகம்மது தம்பி மரைக்கார் –

ல்லாட்சியாளர்களுக்குள் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவ்வப்போது இல்லாமல் போகும் ‘ரகசியத்தை’ அவர்களாகவே போட்டுடைத்து விடுகின்றனர். கிராமத்து பாசையில் சொன்னால் தண்ணிக்கொருவரும், தவிட்டுக்கு இன்னொருவருமாக ஒரே விடயத்தை வௌ;வேறு திசைகளில் இழுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையானது தேவையில்லாத சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றன. இதனால், நல்லாட்சியாளர்கள் மீதான நம்பிக்கையினை இழக்கும் நிலைவரம், அவ்வப்போது மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.

இலங்கை முஸ்லிம்களில் 32 பேர் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துள்ளனர் என்று நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய வெம்மை தணிவதற்குள், அந்தத் தகவல் தவறானது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறியமையுள்ளார். இது – தண்ணிக்கும் – தவிட்டுக்கும் இழுக்கும் நல்லாட்சியாளர்களின் செயற்பாடுகளுக்கு ‘ஒரு சொட்டு’ உதாரணமாகும்.

தேசிய அரசாங்கம் எனும் பெயரில் – இரண்டு பெருந்தேசியக் கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்திருந்தாலும் கூட, அவர்களுக்கிடையிலான கட்சி சார் மனநிலையும், அதன் மூலம் ஏற்படும் ஒவ்வாநிலையும், அவ்வப்போது ஒன்றிணைந்த செயற்பாடுகள் இல்லாமல் போகின்றமைக்கு – பிரதான காரணங்களாக உள்ளன. ஒன்றிணைந்த செயற்பாடுகள் இல்லாமல் போகும்போது, பொறுப்புணர்ச்சி பற்றிய அக்கறைகள் நலிவடையத் துவங்குகின்றன. இதனால், மக்கள்தான் பாதிப்படைகின்றனர். ஐ.எஸ். இயக்கத்தில் 32 இலங்கை முஸ்லிம்கள் இணைந்துள்ளனர் என்கிற நீதியமைச்சரின் தகவலை, ராஜித மறுத்திருந்தாலும், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் – முன்னைய தகவலைத்தான் தூக்கிப் பிடித்துள்ளனர். இந்த நிலைவரத்தினை முஸ்லிம் சமூகம் ஆபத்தாகவே நோக்குகின்றது.

கத்தியில் நடத்தல்

நாட்டில் இடம்பெற்று வருகின்ற இனவாதச் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதில் பெரும்பாலானோர் உடன்பாட்டுடன் உள்ளனர். ஆனாலும், இனவாதம் பேசுகின்றவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மதகுருமார்களாக இருக்கின்றபோது, அதனை அரசாங்கம் எவ்வாறு கையாள்வது என்பது, சிக்கலான விடமாக மாறிவிடுகிறது. அது – ஆட்சியாளர்களுக்கு, ‘கத்தியில் நடப்பதற்கு’ ஒப்பானதாகும். இதனால், சிலரின் இனவாதச் செயற்பாடுகளை விட்டுப் பிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை, ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளமையினைக் காணக் கிடைக்கிறது.

இனவாதச் செயற்பாடுகளில் பௌத்த பிக்குகள் ஈடுபடுகின்றபோது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பாதிப்புக்குள்ளாகும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளன. ஆனால், அவ்வாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின், ‘கௌரவத்துக்குரிய மதகுருமார்களை நல்லாட்சியாளர்கள் அவமானப்படுத்தி விட்டார்கள்’ என்று, எதிர்த்தரப்பு கூச்சலிட்டு, சாதாரண பௌத்த மக்களையும் அரசாங்கத்துக்கு எதிராக உசுப்பேற்றி விடலாம் என்கிற பயம், நல்லாட்சியாளர்களுக்கு உள்ளது. இது – விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கும் ஒரு நிலைவரத்துக்கு ஒப்பானதாகும். அரசாங்கத்தின் இந்தத் தவிப்பு – எதிர்த்தரப்புக்கு கொண்டாட்டமானது.

மு.காங்கிரஸ் – தவ்ஹீத் ஜமாத் முரண்பாடு

இன்னொருபுறம், நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான பேரினவாதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ள காலகட்டத்திலும், ‘ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்’ என்கிற மனநிலையிலிருந்து முஸ்லிம் தலைவர்களில் அதிகமானோர் தூரப்பட்டவர்களாகவே உள்ளனர். பேரினவாதத்தின் நெருக்குவாரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே, முஸ்லிம் சமூகம் உள்ளுக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றமையானது வேதனைக்குரியது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் என்பவர் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து அறிவோம். இனமுறுகiலைத் தோற்றுவிக்கும் வகையில், வெறுப்பூட்டும் படி பேசினார் என்கிற குற்றச்சாட்டு, அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ராசிக்கின் கைதுக்குப் பின்னரான கள நிலைவரம் சற்று பதட்டமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையின் வெம்மையினைத் தணித்து, முஸ்லிம்களை ஆற்றுப்படுத்த வேண்டிய அந்த சமூகத்தின் பொறுப்புவாய்ந்த தலைவர்களில் கணிசமானோர், அதனைச் செய்யாமல், எரிகின்ற நெருப்புக்கு எண்ணை ஊற்றுகின்றவர்களாக இருந்தனர். அல்லது தூரநின்று வேடிக்கை பார்த்தனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், ராசிக் விவகாரத்தை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கின்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் ராசிக் என்பவர், தேசிய புலனாய்வு பணியகத்தின் தகவலாளி என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித கூறியிருக்கின்றார். ‘முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கண்காணிப்பில் இயங்கிய தேசிய புலனாய்வு பணியகத்தின் தகவலாளி’ என்கிற வாசகத்தினை அமைச்சர் ராஜித இதன்போது பயன்படுத்தியிருந்தமை கவனிப்புக்குரியது. கோட்டா மீதான சிறுபான்மை மக்களின் கோபத்தினை, அமைச்சர் ராஜித – தமக்குச் சார்பாக, அரசியலாக்கியிருந்தமையினை அதன்போது அவதானிக்க முடிந்தது.

இதனையடுத்து, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்யொன்றினை வெளியிட்டிருந்தது. அதில் – தமது செயலாளர் ராசிக் தொடர்பில், அமைச்சர் ராஜித தெரிவித்திருந்த தகவலை தவ்ஹீத் ஜமாத் முற்றாக மறுத்திருந்தது. மேலும், அரசின் பாதுகாப்பு பிரிவுகளில் ஒன்றான, தேசிய புலனாய்வு பணியகத்துக்கு தகவல்களை வழங்குவது, தேச துரோகமாகி விடுமா என்றும் அந்த அமைப்பு கேள்வியெழுப்பியிருந்தது. இதேவேளை, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமையும் தவ்ஹீத் ஜமாத்தினர் தமது அறிக்கையில் கடுமையாகக் குற்றம்சாட்டியிருந்தனர். தவ்ஹீத் ஜமாத் செயலாளர் ராசிக் தொடர்பான – அமைச்சர் ராஜிதவின் கூற்றுக்கு அடிப்படையான கருத்தாக்கத்தினை, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான் உருவாக்கினார் என்று, தவ்ஹீத் ஜமாத் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. ‘தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் பற்றி கருத்து வெளியிடும் இடங்களிலெல்லாம், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் தவ்ஹீத் ஜமாத்துக்கு தொடர்பிருப்பதாக மு.கா. தலைவர் கூறிவருகின்றார். மேலும், பொது பல சேனா என்கிற இனவாத அமைப்பும் தவ்ஹீத் ஜமாத் என்கிற இஸ்லாமிய பிரச்சார அமைப்பும் ஒருவரால்தான் இயக்கப் படுகிறது என்றும் அமைச்சர் ஹக்கீம் கருத்து வெளியிட்டு வருகிறார். இது பொய்யான கற்பனையின் உச்ச கட்டமாகும்’ என தவ்ஹீத் ஜமாத் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆக, முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத நெருக்குவாரங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையிலேயே, அந்த சமூகத்தினுள் சமய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு தரப்பினர் முட்டி மோதத் தொடங்கியிருக்கின்றமை – எப்படிப் பார்ததாலும் புத்திசாதுரியமான செயற்பாடாகத் தெரியவில்லை. சாணக்கியம், பக்குவம் பற்றி அடிக்கடி பேசுகின்ற தரப்பினராவது இது விடயத்தில் அளந்து பேசியிருக்க வேண்டும் என்பது அநேகமானோரின் அபிப்பிராயமாகவும் உள்ளது.

பிளவுகளின் விளைவுகள்

இலங்கை முஸ்லிம் சமூகமானது அரசியல் ரீதியாக பிளவுபட்டமையின் தீய வினைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், முஸ்லிம்களின் சமயத்தின் உள்ளே – இயக்க ரீதியாகவும் ஏராளமான பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைவரமானது முஸ்லிம் விரோத செயற்பாட்டாளர்களுக்கு சாதகமாகமாகப் போயிற்று. சமய ரீதியாக எழுந்துள்ள உள்ளக கருத்துபேதங்களைத் தீர்த்துக் கொள்ள முடியாதவர்கள், தமக்கு உடன்பாடற்ற நிலைப்பாடுகளைக் கொண்ட இயக்கம் பற்றி, முஸ்லிம் விரோத செயற்பாட்டாளர்களிடம் ‘போட்டுக் கொடுத்தமை’ குறித்து, பரஸ்பரம் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை கீழ்தரமான செயற்பாடுகளாகும்.

முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது எழுந்துள்ள இனவாதச் செயற்பாடுகளை முன்னிறுத்தியாவது, அந்தச் சமூகம் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. ஐ.எஸ். இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்கள் 32 பேர் இணைந்துள்ளனர் என்று நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்தமையினை அடுத்து, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினர், முஸ்லிம் அரசியல்வாதிகளை அழைத்துப் பேசியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்போது அரசியல்வாதிகளிடையே ஏற்பட்டிருந்திருந்த ‘தற்காலிக ஒற்றுமை’ ஓரளவாயினும் பாராட்டுக்குரியது. அந்தப் பேச்சுவார்த்தை நடந்த மறுநாள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து நீதியமைச்சரைச் சந்தித்து, அவர் வெளியிட்ட தகவல் குறித்த – தமது நிலைப்பாட்டினைத் தெரிவித்திருந்தனர்.

முதலுதவி சிகிச்சையல்ல

முரண்பட்டு நிற்பவர்கள், ‘அடி’ விழுகின்ற தருணங்களில் மட்டும், தற்காலிகமாக ஒற்றுமைப்பட்டு செயலாற்ற முன்வருகின்ற நிகழ்வுகளை நாம் அடிக்கடி கண்டிருக்கின்றோம். இது காயப்பட்ட ஒருவருக்கு வழங்கும் முதலுதவிக்கு ஒப்பானதாகும். முதலுதவியுடன் ஒருவருக்கான சிகிச்சை முடிந்து விடுவதில்லை. ஆனால், முஸ்லிம் சமூகம் – தனக்கு ஏற்பட்டுள்ள பாரிய காயத்துக்கு முதலுதவிகளை மட்டுமே தொடர்ந்தும் செய்து வருகின்றது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பாரிய செயற்பாடுகள் நடக்கின்ற வேளைகளில் மட்டும், அந்த சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தற்காலிகமாக ஒன்று சேர்வதும், பிறகு கலைந்து சென்று, வழமைபோல் தமது மேடைகளில் ஒருவரையொருவர் கழுவி ஊற்றுவதும் அரைவேக்காட்டுத்தனமாக செயற்பாடுகளாகும்.

வெவ்வேறு வேறு திசைகளில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளை, வழிநடத்துவதற்கான துணிச்சல் மிக்க ஒரு சிவில் அமைப்பின் தேவை, மிக நீண்டகாலமாக முஸ்லிம் சமூகத்துக்குள் உணரப்பட்டு வருகிறது. அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, அந்தப் பாத்திரத்தினை அவ்வப்போது கையில் எடுத்து வருகின்றபோதும், முஸ்லிம் அரசியல் தலைவர்களை ஒற்றுமைப்படுத்தும் இலக்கினை, உலமா சபையினரால் இதுவரை எட்ட முடியவில்லை என்பது, கசப்பான உண்மையாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதச் செயற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் கூட – முஸ்லிம் காங்கிரசும், தவ்ஹீத் ஜமாத் அமைப்பும் கருத்துக்களால் முட்டி மோதி, முரண்பட்டுக் கொண்டிருப்பதற்கான அடிப்படை என்ன என்பதை, சமூகம் சார்ந்து ஆராய வேண்டியது அவசியமாகும். முரண்பாடுகளுக்கான காரணங்கள் அடையாளம் காணப்படாத வரை, மோதல்கள் தணியப் போவதில்லை. இன்னொருபுறம், சமயம் சார்ந்த தமது நிலைப்பாடுகளை – தங்களின் அதிகாரத்தினூடாக அரசியல்வாதிகள் பொதுவெளியில் முன்னிறுத்துவதற்கு முயற்சிக்கின்றமை தவிர்க்கப்படுதல் வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும், தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்குமிடையிலான முரண்பாடு தோன்றுவதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.

வாய்ப்பாட்டு அரசியல்

இன்னொரு புறம், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவர் எடுக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டினை, சரி பிழைகளுக்கப்பால் மற்றையவர் எடுப்பது – தற்கால அரசியலில் ஒரு வாய்ப்பாடு போல் அமைந்து விட்டது. சிலவேளை, இரு அரசியல் தலைவர்களும் ஒரே நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், முதலில் அந்த நிலைப்பாட்டுக்கு வந்தவர் யார் என்பதை, பொதுவெளியில் குறிசுட்டு அடையாளப்படுத்தும் முயற்சிகளில் இருவரும் களமிறங்கி விடுகின்றனர். அதாவது, முஸ்லிம் தரப்புகள் தற்காலிகமாக ஒன்றிணைந்து செயற்படும் தருணங்களில் கூட, பலகாரங்களைச் சுட்டெடுப்பதில் ஆர்வம் காட்டாமல், சிலுசிலுப்புகளைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது வெட்கத்துக்குரிய விடயமாகும். ஊடகங்களில் வெளிவரும் அரசியல்வாதிகளின் அநேகமான அறிக்கைகள் இதனை நமக்குச் சொல்லும்.

தலைவலி

இதேவேளை, முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து இயங்க முடியாமைக்கான இன்னுமொரு முட்டுக்கட்டையாக இருப்பது, யார் முஸ்லிம்களின் ‘தேசியத் தலைவர்’ என்கிற காய்ச்சலாகும். இங்கு ‘தேசியம்’ என்கிற சொல்லினூடாக இவர்கள் அடையாளப்படுத்த முயற்சிப்பது, ‘நாடு முழுவதுமுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்குமான தலைவர்’ என்பதாகும். இந்தக் காய்ச்சலானது ‘ஏக பிரதிநிதி’ என்கிற ஜனநாயக விரோத மனநிலையிலிருந்து உருவானதாகும். முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து – கூட்டாகச் செயற்படுவது என்கிற ஓர் உத்தேச நிலைப்பாட்டுக்கு வந்தாலும், மேற்சொன்ன காய்ச்சலால், அந்த கூட்டுக்கு – யார் தலைவர் என்கிற வேறொரு தலைவலி அங்கு ஏற்பட்டு விடுகிறது. இந்தத் தலைவலியினை முஸ்லிம் சமூகம் பல தடவை அனுபவித்துமிருக்கிறது.

தமிழர் சமூகத்தில் அரசியல் ரீதியாக ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்கிற ஒன்றிணைவு ஏற்படுவதற்கு, அந்த சமூகம் பெற்றுக்கொண்ட ‘அடிகளும்’, ‘வலிகளும்’தான் காரணங்களாகும். தனித்தனியாய் இருக்கும் வரை, எதிராளியை வெல்ல முடியாது என்கிற பாடத்தினை, தமிழர் தரப்பு அனுபவத்தில் பெற்றுக்கொண்டது. விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகும், தமிழ் தேசிய கூட்டமைப்பு நின்று நிலைப்பதற்கு, அந்த வலி நிறைந்த அனுபம்தான் காரணமாகும்.

தமிழர் சமூகத்துக்குள் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் ஒன்றிணைவு முஸ்லிம் சமூகத்துக்குள் இன்னும் ஏற்படாமைக்குக் காரணம், முஸ்லிம்களுக்கு ‘வலி நிறைந்த அனுபவங்கள்’ இல்லாமையாகும். தமிழர் சமூகத்தின் அனுபவங்களை, முஸ்லிம்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செயற்படுவதுதான் புத்திசாதுரியமான செயற்பாடாக அமையும்.

அவ்வாறில்லாமல், வலி நிறைந்த அனுபவங்களை வாங்கிக் கட்டிக் கொள்ளாதவரை, ஒற்றிணைந்த அரசியல் செயற்பாடு குறித்து நாங்கள் யோசிக்கப் போவதில்லை என்று, முஸ்லிம் சமூகம் நினைத்துக் கொள்ளுமாயின், அந்த அனுபவத்தை வழங்குவதற்கு, கச்சை கட்டிக்கொண்டு – களத்தில் ஏராளமானோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்