இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்
– எம்.ரீ. ஹைதர் அலி –
சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் தமது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
இன, மத வேறுபாடுகளில்லாமல் தமது உதவித்திட்டங்களுக்குள் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, சுய தொழிலுக்கான கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் கோழிக் குஞ்சுகளை வழங்கும் நிகழ்வு நேற்ற புதன்கிழமை காத்தான்குடி அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே மேற்கண்ட விடயத்தினை மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
அரச கால்நடை வைத்திய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எல். டுஜித்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை செயலாளர்எஸ்.எம்.எம். ஸபி ஆகியோர் கலந்துகொண்டு கோழிக் குஞ்சுகளை பயனாளிகளிடம் வழங்கி வைத்தனர்.
வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களை இனங்கண்டு சுய தொழில்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அவர்களின் குடும்பப் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பிரதேசத்தினை சேர்ந்த 37 பேருக்கும், மண்முனை வடக்கு பிரதேசத்தினை சேர்ந்த 16 பேருக்கும் இதன்போது கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.