
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் (LTTE) முன்னாள் உறுப்பினர் ஒருவரை, விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) 72 மணிநேரத்திற்குத் தடுத்து வைத்துள்ளது.
சண்டிலிப்பாய், மாசியப்பிட்டியைச் சேர்ந்த 50 வயதான கிருஷ்ணகுமார் என்பவரே, இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னர், நேற்று (26) இரவு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 2015ஆம் ஆண்டில், இந்தியப் பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்திய நீதிமன்றம் அவருக்குத் தண்டனை விதித்தது.
இலங்கையை வந்தடைந்த அவரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். குறித்த நபர் தொடர்பாகக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



