தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 240 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ‘கபூர் மாமா’வுக்கு, மேலும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிற பொருட்களை, வண்ணாத்திவில்லு – லாக்டோவத்த பகுதியில் சேமித்து வைத்தது தொடர்பான வழக்கில், மூன்றாவது குற்றவாளியான ‘கபூர் மாமா’ எனப்படும் முஹம்மது ஷரீஃப் ஆதம் லெப்பை என்பவருக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இன்று (28) இந்தத் தீர்ப்பை வழங்கியது. தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய இந்த அமர்வு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இருப்பினும், இந்தத் தண்டனைகள் அனைத்தும் ஒரே காலத்தில் அனுபவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், அவர் மொத்தம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளி ஏற்கனவே விளக்கமறியலிலும், தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழும் கழித்த ஏழரை ஆண்டுகளை, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து கழித்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, அவர் இன்னும் சுமார் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை வழங்கும்போது, ​​வழக்கினை நீடிக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டமை, அவரது வயது (63) மற்றும் பிற விசேட சூழ்நிலைகளை நீதிபதிகள் கருத்தில் கொண்டனர்.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் கபூர் மாமா எனப்படும் இந்த நபருக்கு, 240 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இந்த வழக்கின் ஆறாவது குற்றவாளியான ‘சாஜித் மௌலவி’ எனப்படும் முஹம்மது ரமீஸ் முஹம்மது சாஜித் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்.

அவரது நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக, இந்த வழக்கு நாளை (29) காலை 8.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை காலை 7.45 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், ‘கஃபூர் மாமா’ மீது கேகாலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மேல் நீதிமன்றங்களில், வேறு இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை அந்த நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போது விசேட பாதுகாப்பு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில், ஆறு பேர் மீது மொத்தம் 13 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐவர் ஏற்கனவே குற்றங்களை ஒப்புக்கொண்டு, அவர்களுக்குத் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆறாவது குற்றவாளி நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, விரைவு நடைமுறையின் மூலம் வழக்கினை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறாரா என்பதை நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும்.